‘பெரியண்ணா’வின் தாராளமனம்’

இலவசமாகக் கொடுக்கப்படும் பொருட்களை வாங்காமல் தட்டிக்கழித்தால், உறவு முறிந்துவிடும்; வாங்கிவிட்டால், அவர்களின் எதிர்பார்ப்பை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், உறவு முறிந்துவிடும். ஆனால், நாடுகளுக்கு இடையிலான உறவு என்பது, இராஜதந்திர ரீதியில் அணுகப்படுவதாகும். அண்டைய நாடுகளுடன் அந்நியோன்னியமாக இருக்கவேண்டும். அவ்வாறான நிலைமைகள் இல்லாமற்போகும் போதுதான், நாடுகளுக்கு இடையில், மோதல் ஏற்படுகிறது. அது, நிலத்தொடரால் இணைத்திருக்கும் நாடுகளுக்கு இடையில் பெரும் பிரச்சினையாகதான் இருக்கும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலத்தொடர்பு இன்மையால், அண்டைய நாடுகளின் ஆதிக்கம் எமது நாட்டின் மீது நேரடியான தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும், நாலாப்புறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், எமது நாட்டை ஒரு மையமாகக் கொண்டு, ஏனைய நாடுகள் உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.

அது, ஆட்சிபீடமேறும் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விவகாரமாகவே இருக்கும். ஆனால், எந்த ஆட்சிவந்தாலும், இந்தியாவுடன் உறவுப்பாலத்தில் ஒருசிறு கீறல்கூட ஏற்படாது. அதனால்தான், இலங்கையின் ‘பெரியண்ணா’வாகவே இந்தியா எப்போதும் பார்க்கப்படுகின்றது.

இயற்கை அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போதெல்லாம், முதலாவதாக உதவிக்கரம் நீட்டி, தூக்கிவிட்டுச் செல்லும் இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் தொகுதி தடுப்பூசிகளை அனுப்பி வைத்திருக்கிறது.

‘அக்கம் பக்கத்தினருக்கு முதலில்’ எனும் தொனிப்பொருளில் தாங்கிவரப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள், இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளன. இதற்கிடையில், சீனாவும் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகி வருகின்றது.

இலங்கையின் மீதான சீனாவின் காலூன்றல் இறுக்கமானதாய் அமைந்துவிடக் கூடாதென இந்தியா நினைப்பதில் தவறில்லை. அதற்காகத்தான், இலவச தடுப்பூசிகளை வழங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மறுபுறத்தில், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 49 சதவீதத்தை இந்திய நிறுவனமொன்று கையகப்படுத்திக் கொள்வதற்கான பரிசாகவே, ‘அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட்’ தடுப்பூசி வழங்கப்பட்டதாக மற்றுமொரு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “இந்தியாவின் தாராள மனம்” எனத் தெரிவித்தார். தாராள மனத்தால் தடுப்பூசி கிடைத்துவிட்டதென எண்ணி, அசட்டையாக இருந்துவிடக்கூடாது.

ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்று தணியவில்லை. முதல்சுற்றில் சாதாரண பொதுமக்கள் உள்ளீர்க்கப்படமாட்டார்கள். இன்னும் பலர் அச்சத்துடனேயே இருக்கின்றனர். ஆகையால், சுகாதார வழிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்து, முன்னோக்கி நகரவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

(Tamil Mirror)