பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம்.

இத‌ற்காக‌த் தானே தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்த‌ப் ப‌டுகின்ற‌ன‌? ச‌முதாய‌த்தில் எந்த‌ மாற்ற‌மும் வ‌ந்து விட‌க் கூடாது என்ப‌தில் ஆட்சியாள‌ர்க‌ள் குறியாக‌ இருக்கிறார்க‌ள். இத‌ற்குள் ஓட்டுப் போட்டு விட்டு “ஒரு விர‌ல் புர‌ட்சி” செய்து விட்ட‌தாக‌ கூறும் சில‌ர‌து அல‌ப்ப‌றைக‌ள் எரிச்ச‌ல் ஊட்டுகின்ற‌ன‌.

தேர்த‌ல் முடிந்த‌ பின்ன‌ர், பாம‌க‌ க‌ட்சியை சேர்ந்த சாதிவெறிக் காடைய‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ளின் வீடுக‌ளை பார்த்து தாக்கியுள்ள‌ன‌ர். இது க‌ட்சி அர‌சிய‌லும் சாதிய‌வாத‌மும் எப்ப‌டி ஒன்றுட‌ன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள‌து என்ப‌தை எடுத்துக் காட்டுகின்ற‌து.

த‌மிழின‌ ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை, நாம் த‌மிழ‌ர் போன்ற‌ தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் பேசும் க‌ட்சிக‌ள் எதுவும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இத‌ற்குள் தாம் ம‌ட்டுமே த‌மிழ‌ரின் மான‌ம் காப்ப‌தாக‌ அடிக்கும் வாய்ச் ச‌வ‌டால்க‌ளுக்கு ம‌ட்டும் குறைச்ச‌ல் இல்லை. த‌ன‌க்குள்ளே ஒரு ச‌மூக‌த்தை சாதியின் பெய‌ரால் ஒடுக்கும் ஓர் இன‌ம் எப்ப‌டி விடுத‌லை பெறும்?

இங்கே வேடிக்கை என்ன‌வெனில், தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ ச‌மூக‌த்தின் க‌ட்சித்த‌லைவ‌ரும், தாக்க‌ப் ப‌ட்ட‌ ச‌மூக‌த்தை பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்தும் க‌ட்சித் த‌லைவ‌ரும், முன்ன‌ர் ஒரே மேடையில் தோன்றி த‌மிழ்த்தேசிய‌ம் பேசிய‌வ‌ர்க‌ள் தான். புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் நாடுக‌ளுக்கும் சென்று, பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌த்தை ஏந்தி, புலிச் சின்ன‌ம் பொறித்த‌ சால்வை போர்த்தி, த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்து அன‌ல் ப‌ற‌க்க‌ பேசிய‌வ‌ர்க‌ள் தான். அன்று அவ‌ர்க‌ளைக் கூப்பிட்டு பேச்சுக்க‌ளை கேட்டு ம‌கிழ்ந்த‌ ஈழ‌த்து புலி ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ர் கூட‌ இந்த‌ சாதிவெறி வ‌ன்முறையை க‌ண்டிக்க‌வில்லை.

த‌மிழின‌ம் த‌ன‌க்குள் இருக்கும் பிரிவினைக‌ளை பூசி மெழுகி விட்டு, “த‌மிழ‌ர் ஒற்றுமை” ப‌ற்றிப் பேசுவ‌தும் இன்னொரு அட‌க்குமுறை தான்.