வாழ்தலுக்காக நாளை காலையும் வீதியில் இறங்க தயார் நிலையில் நாம்….

தரையால் கனடாவுடன் இணைந்துள்ள அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பது காரணம் என்று காட்டப்பட்டாலும் இதற்குள் ஒரு ஏகாதிபத்திய அரசியல் இல்லாமல் இல்லை.

கனடாவிற்குள் வெளியே உலகம் எங்கும் இருக்கும் கனடிய பிரஜைகள், வதிவிட உரிமையுள்ளவர்களை உடனடியாக நாடு திரும்புமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது அரசு. ஆகக் குறைந்தது தனது நாட்டு மக்களை காப்பாற்றவாவது முயற்சிகள் எடுத்திருக்கின்றது.

கியூப நாடு கொரனா பாதிபிற்குள்ளான? பிரித்தானிய உல்லாசப் பயணிகளை மனித நேயத்துடன் தனது நாட்டிற்குள் எடுத்து பராமரிப்பது போலல்லாவிடினும்.

மக்கள் கூடுவதை இதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பாசாலை, பல்கலைக் கழகங்கள் என்பனவற்றை ஒரு மாதம் அளவில் மூடியுள்ளது. பொது இடங்கள், விழாக்கள், நிகழ்வுகளில் 50 பேர் இற்கு மேல் கூடுவதை தடை செய்துள்ளது.

கூடவே உணவுச்சாலைகள் விளையாட்டுத் திடல்கள், களியாட்டத்திடல்கள், என்பனவற்றில் செயற்பாடுகளில் அங்கு பிரசன்னமாகி கூட்டமாக அமர்ந்து செயற்படுதை முற்று முழுதாக தடை செய்துள்ளது.

வேலைத் தளங்களுக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்தபடி வேலை செய்வதை ஊக்குவிக்கின்றது. முடிந்தளவில் தேவை ஏற்படாத இடத்து வெளியே செல்லாது வீட்டிற்குள் முடங்கி இருக்கவே மக்களைச் அறிவுறுத்துகின்றது.

பொதுப் போக்குவரத்து, உணவுப் பொருள் அங்காடிகள், வைத்தியசாலை, மின்சார, நீர் விநியோகம், குப்பை அகற்றல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழமைபோல் நடைபெற அனுமதித்துள்ளது.

தெருவெல்லாம் வழமையை விட 10 வீதமான மக்களே தமது நடமாட்டத்தை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்க பணிக்கப்பட்ட முதலாளித்துவம் தற்போது பதுங்கி இருங்கள் என்கின்றது.

வேலை பறிப்பு இல்லை என்றாலும் சம்பளப் பறிப்பிற்கு தடையில்லை. ஆனால் கடன் கொடுப்பனவுகளில் சிறிய தளர்ச்சிகளை அரசு அனுமதிகலாம் என்று நம்பப்படுகின்றது. ஆனாலும் நிலமைகள் சீரானதும் அவற்றை மொத்தமாக மீளச் செலுத்த வேண்டிய நிலையில் சலுகைகள் இல்லை. இதற்கு இங்கு வேலை வழங்குபவர்களிடமோ அரசிடமோ எந்த மானியத்தையும் எதிர்பார்க்க முடியாது.

தேசமே ஒரு வகை உறங்கு நிலையை அடைந்த நிலையில் சமான்ய மக்கள் வருமானங்கள் இன்றி ஆனால் மூலதனம் ஒரு இடத்திலேயே வழமை போல் தேங்கியிருக்க அன்றாட வாழ்விற்கு தவிக்கும் நிலையை கொரானாவை காரணமாக்கி அரசுகள் மௌனமாக இருக்கின்றன.

சிறிய தொழில் முயற்சிகள் நலிவடையாமல் இருக்க உதவிகள் என்ற அறிவுப்புகளுக்குள் தனிநபர் வருமானம் சரிசெய்யப்படும் என்ற சிந்தனையே அரசிடம் மேலோங்கி இருக்கின்றது.

ஒரு விடயத்தை பாராட்டியே ஆகவேண்டும் இலவச மருத்துவம் என்ற முறமை கனடா தேசத்து மக்களை நோய் தொற்று, சிகிச்சை அளிப்பிலிருந்து காப்பாற்றியே வருகின்றது. இதில் இலவச மருத்துவம் இல்லாத அமெரிக்காவை விட கனடா இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து கொள்கின்றது.

எமக்கான மிக அடிப்படையான உணவுகளை உற்பத்தி செய்யும் தட்ப வெப்பநிலை இல்லாததும் பெரும்பாலும் மின்சாரத்தனால் ஆன வெப்பமூட்டி இல்லாவிட்டால் மரணிக்கும் குளிரும் இலங்கை போலன்றி கொட்டில் வீடும் 200 கண்டு தோட்டமும் 200 கிராம் கீரைக் விதையும் கனடா வாழ் மக்களை காப்பாற்ற முடியாது.

இந்த வகையில் எமது தாயக இலங்கையற்கள் பூமித்தாயால் ஆசீர்வதிக்கப்பட்ட அட்சய பாத்திர மண்ணில் வாழ்ந்து வருவதினால் தற்போதைய சூழலில் தப்பி பிழைக்க வாய்புகளை கனடாவை விட அதிகமாக கொண்டுள்ளனர்.

விஞ்ஞான வளர்சியும், கியூபாவின் மருத்துவக் கண்டு பிடிப்புக்களும், கொரானாவின் கொலை செய்யும் வீதம் 3 வீதத்திற்குட்பட்ட நிலமையும் மனித குலம் தப்பி பிழைக்க பல வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையை உயரினங்களுக்கு இயல்பாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியுடன் இணைந்து ஏற்பட்டிருக்கின்றது.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிலும் இருதய நோய், நீரழிவு நோய், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு ‘ஆபத்தை” கொரனா அதிகம் ஏற்படுத்தலாம் என்ற எச்சரிகையையும் மீறி என் வீட்டில் என்னை விட இளமையான என் வாழ்க்கைத் துணை, மகன், மகள் மூவரும் தமது அலுவலக வேலை, படிப்பு என்பனவற்றை வீட்டில் இருந்து செய்ய இவர்களுக்கு மூத்தவரான நான் தினமும் வேலையிற்காக வீதியில் அலையும் நிலமை.

ஆனாலும் இளைஞனாக நம்பிக்கையுடன் வீதியில் நடமாடும் அந்த 10 வீத கனடிய மக்களில் ஒருவனாக நாளை காலையிலும் வீதிக்கு செல்கின்றேன்.
ஒன்று மட்டும் உறுதி நான் வாங்கலாம்…?
கொரனாவை ஏனையவர்களிடம் இருந்து. ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் அதனைக் கொடுக்க மாட்டேன்.

என உயிர் வாழ்தலை விட மற்றயவர்களின் உயிர் வாழ்தலே எனக்கு முக்கியம். மனித குலத்தின் மீட்சிக்கு நாம் எல்லோருக்கும் இருக்க வேண்டிய சிந்தனை இது.

1970 பிற்பகுதியில் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பித்த நிச்சயமற்ற உயிர் வாழ்தல் அனுபவங்களை தற்போது நிகழ்வுகள் நினைவுபடுத்தினாலும்…

வாழ்வதற்காக போராடுதல் என்ற அன்றைய இளைய சிந்தனை இன்றைக்கும் வேலைக்கு செல்லுதல் வாழ்வதற்காக என்பதில் உறுதியாக இருப்பதினால் இளைஞனாக…. நாளை காலையிலும் வீதிக்கு இறங்க தயாராக……. நித்திரைக்கு செல்கின்றேன் தற்போது….

வாழ்ந்தால் எல்லோரும் சேர்ந்தே வாழுவோம்….. எனக்கு நம்பிக்கை இருக்கின்றது இந்த மனித குலத்தில்….. நிச்சயம் நாம் எல்லோரும் சேர்ந்தே வாழுவோம் என்று…..