விடிந்தால் கனடியத் தேர்தல்

மூன்று பிரதான கட்சிகளும் வேறு இரு சிறிய கட்சிகளுமாக தேர்தலை சந்திக்கின்றன. வலதுசாரி சிந்தனை பழமைவாதக் கட்சி, ஜனநாயகப் பண்புகளை தூக்கி பிடிக்கும் லிபரல் கட்சி, மக்கள் நலன்களை அதிகம் முன்னிறுத்தும் புதிய ஜனநாயகக் கட்சி இவற்றிடையே ஆட்சியியை அமைக்கும் போட்டியே இருப்பதாக உணரப்படுகின்றது. பழமைவாதக கட்சி வெல்லக் கூடாது என்ற வகையில் ஏனைய கட்சிகள் இடையே ஒருவகையான எழுதப்படாத புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இடதுசாரி சிந்தனையை தனதாக்கிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இந்திய வம்சாவழிச் சீக்கியர் என்பதுடன் தலைவர்களின் பொது விவாதங்களில் என்றும் போல் அக்கட்சி அதிக மதிப்புக்களை பெற்று தனது ஆதரவு தளத்தை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாளில் இருந்து ஏறுமுகமாக பெற்று வருகின்றது. ஏனைய இரு கட்சிகளின் ஆதரவுத்தளம் அதிக அளவில் விவாதங்களால் மாற்றம் அடையவில்லை.

அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாகாணங்களாக ஒன்ராறியோ, பிரஞ்சு மொழி பேசும் கியூபெக் என்பன காணப்படுகின்றன. இவ்விரு மாகாணங்களிலும் அதிக பிரநிதிகள் வெல்வார்களோ அந்தக் கட்சியினரே முழு கனடாவிற்கும் ஆட்சியமைக்கும் தகமையைப் பெறுவர் என்ற எண் சூத்திரம் உண்டு. இந்த வகையில் தற்போது பிரதமராக இருக்கும் ஜஸ்ரின் ரூடோ தேர்தல் திகதி அறிவித்த காலத்தில் அதிக ஆதரவுத் தளத்தை இவ்விரு மாகாணத்தில் பெற்றிருந்தாலும் ஒரு மாத கால பிரச்சாரத்தின் போது ஒன்ராறியோவில் புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஏறிவரும் ஆதரவு கொன்சவேற்றிக் கட்சிக்கான சில வெற்றிகளை இங்கு அதிகரிகச் செய்யலாம்.

இதே போலவே கியூபெக் மாகாண பிராந்திய கட்சி புளக் கியூபெக்குவா இற்கு ஏறி வரும் ஆதரவுத்தளம் கொன்சவேற்றிவ் கட்சிக்கு சாதகமாக அமையலாம். லிபரல் கட்சியின் ஆதரவாளர்களே இவ் இரு மாகாணத்திலும் தனது ஆதரவாளர்களை இந்தக் கட்சிகளிடம் அதிகம் இழந்து வரும் சூழலே இருப்பது இதற்கு காரணமாக அமைகின்றது. எவை எப்படி இருப்பினும் கொன்சவேற்றிவ் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்தும் முடிவுகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி அமைதலே கனடாவிற்கும் முழு உலகிற்கும் நல்லது.

வழமைபோல் வலதுசாரிகளை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் போக்கே பெரும் போக்காக தமிழர் தரப்பில் இங்கு கனடாவிலும் காணப்படுவது துர் அதிஷ்டமே. நாம் தமிழர் என்ற அடையாளத்திற்காக தமிழர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கே எமது வாக்கு என்ற போக்கு தமிழர் அதிகமாக வேட்பாளராக நிற்கும் கொன்சவேற்றிக் கட்சியிற்கு எம்மவரின் வாக்குகள் அதிகம் செல்வதற்குரிய வாய்ப்புகள் அதிகம். இது ஒரு ஆரொக்கியமான நிலமை அல்ல. இதற்கு விதிவிலக்காக சில தமிழ் வேட்பாளர்களும், வாக்காளர்களும் இருப்பதையும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது.

விடிந்தால் விடியல் யாருக்கு என்ற ஆட்டம் ஆரம்பித்து மாலையில் வெற்றி மாலை யார் கழுத்தில் என்பது தெரிந்துவிடும். அதிகம் அடிப்படை ஊதியத்தில் வேலை செய்யும் பூர்வகுடிகள், ‘வந்தேறு” குடிகள், பின்தங்கிய ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஸ் கொலம்பியா மகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாண மக்களுக்கா என்று தெரிந்துவிடும். மக்களின் தீர்ப்பு முன்னேற்றகரமாக அமைய வேண்டும் என்ற நம்பிகையுடன் காலை விடியட்டும்