விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியம் 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளது.

நீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது