2019: காலம் கலைத்த கனவு

கடந்து போகும் இவ்வாண்டு, வாலறுந்த பட்டம் போல் அனைத்துத் திசைகளிலும் அலைக்கழிந்து அலைக்கழித்து தனது முடிவை எட்டுகிறது. கனவுகளோடு தொடங்கிய இவ்வாண்டு, இப்போது கற்பனைகளோடு முடிகிறதா? காரியங்களைச் சாதித்த கர்வத்துடன் முடிகிறதா அல்லது கனத்த மனதுடன் முடிகிறதா என்பதை, இக்கட்டுரை சுருக்கமாக நோக்க விளைகிறது. 2019ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கையில், சில முக்கிய விடயங்கள் முனைப்படைவதை அவதானிக்க முடிகிறது. அந்த முனைப்புகளை சுருக்கமாகவும் விளக்கமாகவும் பார்ப்பது இனி வரும் காலத்தைக் கணிக்க உதவக் கூடும்.

வீதிகள் போராட்டத் தீயில் பொசுங்கிய பொழுதுகள்

உலக வரலாற்றில் மக்கள் வீதியில் இறங்கி போராடுவது, பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், குறித்த சில ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், வீதிகளில் இறங்கிப் போராடினால் அது உலக அரங்கில் திசைவழியை மாற்றும் தன்மையைப் பெற்று விடுகிறது. இதை, உலக வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

மக்களின் போராட்டங்கள் அதிகளவில் அதிகரித்த சில ஆண்டுகளை வரலாற்றில் திருப்பி பார்த்தால் குறித்த ஆண்டை தொடர்ந்த அடுத்தாண்டில் பாரியளவு மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடியும். மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது, பாரியளவில் ஆர்ப்பாட்டம் செய்வது, புரட்சிகர சிந்தனைகள் மேலெழுவது என்பன, வரலாற்றில் குறிப்பாக நான்கு காலப்பகுதிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. 1848,1917,1968,1989 ஆகிய ஆண்டுகள், மேற்குறித்த தன்மையை உடைய ஆண்டுகள். இந்த ஆண்டுகளைத் தொடர்ந்த அடுத்த ஆண்டுகளை நோக்கினோமானால், அவை உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள் என்பது எமக்குப் புலனாகும்.

2019ஆம் ஆண்டை வரலாறு மீட்டிப் பார்க்கும்போது, பெருமக்களின் பெருவிருப்பு நோக்கியதாக மக்களின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நிறைந்த ஆண்டாக 2019ஆம் ஆண்டு வரலாற்றால் நினைவு கூரப்படும்.

கடந்து போகும் ஆண்டை பூகோள ரீதியிலான பரம்பலின் அடிப்படையில் நோக்குவோமானால், போராட்டங்களால் உலகெங்கும் நிறைத்த அரசுகளுக்கு எதிரான பாரிய போராட்டங்களும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிப்போன ஆண்டே நம்மைக் கடந்து போகும் இந்த ஆண்டு ஆகும். இந்தியா, சிலி, ஈக்குவடோர், கொலம்பியா, ஸ்பெயின், பிரான்ஸ், செக் குடியரசு, மால்டா, அல்ஜீரியா, ஈராக், ஈரான், லெபனான், சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில், பாரிய மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, இந்த நாடுகளின் பட்டியல் முழுமையானதல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும். மக்களின் இந்தப் போராட்டங்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது மிக முக்கியமான வினாவாகும். இதை விளங்கிக் கொள்ளாமல் கடந்துபோகும் இவ்வாண்டின் திசை வழியை விளங்கிக்கொள்ள இயலாது.

நடைமுறையிலுள்ள பொருளாதார முறைகளின் தோல்வியும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முடியாத ஒரு முறையாக, நடைமுறையிலுள்ள முதலாளித்துவ பொருளாதார முறை அமர்ந்திருப்பதும் உலகப் பொருளாதாரம் செயற்பட முடியாததாகவும் ஊழல் நிறைந்ததாகவும் மாறியுள்ள சூழலில், மக்களுக்கு வீதிக்கு இறங்குவதைத் தவிர வழி இல்லை.

ஜனநாயகம் தனது உண்மையான முதலாளித்துவ குறுங்குழு நலன்சார் ஒன்று என்ற உண்மை மெதுமெதுவாக வெளித்தெரியத் தொடங்கிய நிலையில், ஜனநாயகத்தின் மீதான கேள்வியாகவும் நம்பிக்கையின்மை இன்மையாகவும் இவ்விரண்டும் வெளிப்பாடாகவும் உலகெங்கும் பரந்து விரிந்துள்ள மக்கள் போராட்டங்களை அவதானிக்க முடிகின்றது.

சோசலிசத்தின் முடிவு அறிவிக்கப்பட்டு, இரண்டு தசாப்தங்கள் நிறைவடைகின்ற நிலையில், முதலாளித்துவ ஜனநாயகம் தனது முடிவை எட்டுவதையும் சோசலிசம் தவிர்க்கவியலாத ஒன்று என்பதை உலகும், உலக அரசியல் அரங்கும், உரிமைகளுக்காகப் போராடும் மக்களும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, இவ்வாண்டின் நிகழ்வுகள் காட்டுகின்றன.

பிரான்ஸின் தலைநகர் பரி​ைஸ ஸ்தம்பிக்கச் செய்த தொடர்ச்சியான மஞ்சள் மேற்சட்டைக் காரரின் போராட்டங்கள், புதிய ‘சமூக ஒப்பந்தம்’ ஒன்றின் தேவையை விளக்கி நிற்கின்றன. சிலி நாட்டின் தலைநகர வீதிகளில் திரண்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், சிலியின் ஆன்மாவோடு ஒன்றிணைந்த ஆனால் மறந்து போயிருந்த போராட்ட குணத்தையும் சோசலிச சிந்தனைகளையும் முன் தள்ளி இருக்கின்றன. மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் குறிப்பாக அல்ஜீரியா, சூடான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ள போராட்டங்கள் அந்நாட்டின் அரசுத் தலைவர்களைப் பதவியில் இருந்து அகற்றி உள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டங்கள் ஜனநாயகத்தின் நெருக்கடியைத் தெட்டத்தெளிவாக பொது வெளியில் கொண்டுவந்து சேர்த்துள்ளன. இந்த மூன்றின் அடிப்படையில், 2019ஐ மக்கள் போராட்டங்களின் ஆண்டாக அடையாளம் காண்பதில், சிரமங்கள் எதுவும் இரா.

இந்த ஆண்டின் போராட்டங்களை நாம் அதிதீவிர வலதின் எழுச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிற காலப்பகுதியில் நடப்பதையும் நோக்க வேண்டியுள்ளது. ஒருபுறம் தேர்தல் அரசியலில் அதி மனிதர்களும் தீவிர நிலைப்பாடுகளை முன்னிறுத்தும் தனிநபர்களும் கட்சிகளும் செல்வாக்கைப் பெற்றுள்ளன. இது உலக அரசியலில் புதியது மட்டுமன்றி, பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்கவியலாது. இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் எழுச்சிகரமான மக்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக சில முக்கிய செய்திகளை சொல்கின்றன.

முதலாவது, பாரம்பரிய அரசியல் முறை மீதான வெறுப்பு உலகில் பெரும்பான்மையான மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ளது. அதை ஏதாவது ஒரு வழியில் வெளிக்காட்டி விடுவது என்று மக்கள் தீர்மானித்துள்ளார்கள். மக்களின் தெரிவு இரண்டு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒன்றில் அவை அதி தீவிர வலதுசாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறார்கள் அல்லது மக்களே வீதிக்கு இறங்கிப் போராடுகிறார்கள். அதிதீவிர வெகுஜன விருப்பை முன்னிலைப்படுத்தும் அரசியலின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளாக முன்னிலைக்கு வந்துள்ளது.

அந்த ஆட்சிகள் செய்யத் தவறி உள்ள மக்கள் நல திருத்தங்களும், மக்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்து உள்ளன என்பதையும் இங்கு நினைவூட்ட வேண்டும். இது எதைக் குறிக்கிறது நடைமுறையில் உள்ள அரச கட்டமைப்பு முறைகளின் மீதான விருப்பம் புதிதாக பதவிக்கு வந்த அதி தீவிர வெகுஜன அரசியல் கட்சிகளின் சீரழிவும் இணைந்து உலகெங்கும் மக்களை வீதிகளில் இறங்கிப் போராட வைத்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் வெறுமனே தோன்றி மறையும் வானவேடிக்கைகள் போலன்று தொடர்ச்சியாகவும் திடமாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் உணர்வுபூர்வமாக இவ்வாண்டு முழுவதும் நடைபெற்றிருப்பது, கடந்த சில ஆண்டுகளில் நடந்தவற்றை விட வேறுபட்ட திசையில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இது பயனுள்ளது மட்டுமன்றி, தேவையானதும் கூட. திசைவழியைத் தீர்மானித்து இடைவிடாது, கோரிக்கைகளை விட்டுக் கொடுக்காது இந்த மக்கள் தொடர்ந்தும் போராடுகிறார்கள்.

இந்தப் போராட்டங்களுக்கு அரசு இரண்டு வழிகளில் பதில் அளிக்கிறது. ஒன்றில் அவர்களைக் கண்டும் காணாமல் விடுவதன் மூலம் புறக்கணிப்பு அரசியலை செய்கிறது. இரண்டாவது போராட்டக்காரர்கள் மீது அரச வன்முறையைப் பயன்படுத்துவதோடு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறது. இந்த இரண்டு வழிமுறைகளும் கடந்த காலங்களில் அரசுகளால் பயன்படுத்தப்பட்ட முறைகள்தான். ஆனால் இவ்வாண்டு போராட்டங்களின் சிறப்பு யாதெனில், அரசுகள் கைக்கொண்ட இந்த இரண்டு முறைகளும் வெற்றியளிக்கவில்லை.

உதாரணமாக, பிரான்ஸின் மஞ்சள் சட்டைக்காரர்களைக் கணக்கில் எடுக்காமல் புறக்கணிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்தார். ஆனால் பிரான்ஸின் தலைநகர் பாரிஸையே ஸ்தம்பிக்க வைத்த போராட்டங்களை மஞ்சள் சட்டைக்காரர்கள் நடத்தியபோது, அதற்கு பதில் இன்றி பிரெஞ்சு ஜனாதிபதி விக்கித்து நின்றார்.

இந்தியாவின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணாகவும் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அவர்கள் மீது வன்முறையை அரசு கட்டவிழ்த்து விட்டு அரச பயங்கரவாதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் அங்கும் மக்கள் போராட்டங்கள் ஓயவில்லை. இவை இவ்வாண்டு போராட்டங்களின் சிறப்பியல்பு. மக்கள் போராட்டங்களுக்கு பதில் அளிக்க இயலாமல், அரசும் ஆட்சியாளர்களும் தவித்துப் போகும் நிலையை இவ்வாண்டு போராட்டங்கள் தோற்றுவித்துள்ளன. இந்த அனுபவங்கள், போராடும் அவர்களுக்கும் அதை ஒழுங்கா வைப்பவர்களுக்கு பாரிய படிப்பினைகளை வழங்கியுள்ளன. அந்தப் படிப்பினைகளின் ஊடே, மக்கள் போராட்டங்கள் இவ்வாண்டு தம்மை வளர்த்துத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

இந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி அளிப்பதற்கும் தொடர்வதற்கும், சாத்தியமான மிக பிரதானமான காரணம், போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற அமோகமான ஆதரவு. பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் இவ்வாறான போராட்டங்கள் ஒழுங்கு அமைக்கப்படுகின்றன. எனவே அவை பலனுள்ளவையாகின்றன. மக்களோடு ஒன்றிணைந்ததான போராட்டங்கள் ஒருபுறம் அரசுக்கு சவால் விடுவதோடு, மறுபுறம் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டமைத்துள்ளன.

இது ஒருவகையில் ஜனநாயகத்தின் முடிவை நோக்கிய பாதையைக் காட்டுகின்றன. நாம் ‘ஜனநாயகத்துக்குப் பிந்தைய உலக ஒழுங்கை’ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இது குறித்து அடுத்தவாரம் நோக்கலாம்.