1986ம் ஆண்டு நடந்த சகோதரப்படுகொலைகளில் நூற்றுக்கணக்கான EPRLF, டெலோ, புளொட் இயக்க இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தப்பியிருந்தவர்களும் – LTTE யின் கடுமையான கண்காணிப்பின் கீழ் – பயத்துடனேயே வாழ்ந்து வந்தனர். பலர் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் – தப்பிச்சென்றனர்- சிலர் சிறி லங்கா இராணுவ முகாம்களில் தஞ்சம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பொது நிறுவனங்கள், மாற்றுக்கருத்துள்ளவர்கள் அனைவரும் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்கனவே இருந்தது. அந்தப்பிடி மேலும் இறுகியது. அந்தக் காலகட்டம் பற்றி நேரடி அனுபவமுள்ளவர்கள் தான் விபரிக்க முடியும். அந்தக்காலகட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு சில துண்டுப்பிரசுரங்கள் – மற்றும் முறிந்த பனை – போன்ற நூல்களில் பல விரிவான தகவல்கள் உள்ளன.
சிறி லங்கா அரசு தனது உளவுத்துறையையும் – இஸ்ரேலிய மொஸாட் – பிரித்தானிய -Keenie Meenie Services- (KMS ) எனப்படும் நிறுவனம்- பாகிஸ்தானின் – அமெரிக்க – உளவு நிறுவனங்களின் நேரடி வழிகாட்டலுடன் படைபலத்தை நவீன மயப்படுத்தி – பலப்படுத்தி வந்தது.
8-01-1987 அன்று சிறி லங்கா இராணுவம் குடாநாட்டில் 17 முகாம்களில் இருந்து வெளியேறி – பாரிய தாக்குதல் நகர்வை மேற்கொண்டது. புலிகள் இயக்கம் – 2009 இல் முள்ளிவாய்க்காலில் ஒதுக்கப்பட்டது போல – அப்போது வடமராட்சிக்குள் ஒதுக்கப்பட்டனர் (Cornered )
இதனை தொடர்ந்து 1987 மே மாதமளவில் – முதன் முதலாக – சிறி லங்கா இராணுவம் – 4000 வரையான துருப்புகள் – விமானப்படை – Helicopter Gunships – கடற்படை கப்பல்களில் இருந்து தாக்குதல் – என வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையை – Operation Liberation – என்ற பெயரில் மேற்கொண்டது. அத்துடன் குடாநாட்டின் மீது பொருளாதார தடையையும் அமுல்படுத்தியது.
28-05-1987 அன்று ராஜிவ் காந்தி – இது தொடர்பாக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றில் – தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு- உணவுப்பொருள் தடை – Blockade – இவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா தலையீடு செய்யும் என்று அறிவித்தார்.
2-06-1987 அன்று உணவுப்பொருட்கள் அடங்கிய சிறிய கப்பல்களை அனுப்பியது. இவை சிறி லங்கா கடற்படையால் திருப்பி அனுப்பப்பட்டது.
4-06-1987: இந்திய அரசு – விமானப்படை மூலம் – 25 தொன் (Tonne) – உணவுப்பொதிகளை – தமிழ் பகுதிகளில் விநியோகித்தது. இந்த பொதிகள் இராணுவ முகாம்களுக்குள் சென்று விடாமல் இருக்க – புலிகளின் தொலைத்தொடர்புகள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டது – . இந்திய விமானப்படையின் AN -32 ரக விமானமும் அதற்கு துணையாக Mirage ரக போர்விமானங்களும் ஒருங்குசேர வந்து – பூமாலை – நடவடிக்கை என்று அழைக்கப்பட்ட – Operation Poomali – உணவு விநியோகம் நடந்தது.
இந்திய விமானப்படையின் இந்த நடவடிக்கை – சிறி லங்காவின் வடமராட்சி மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்த விடுக்கப்பட்ட- எச்சரிக்கை என்பதை சிறி லங்கா உணர்ந்து 5-06 -1987 -அன்று வடமராட்சி மீதான தாக்குதலை நிறுத்தியது.
1986 சகோதரப்படுகொலைகள் – முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இராணுவம் வெளியே வந்த நிலைமை – உக்கிரமாக நடைபெறும் வடமராட்சி தாக்குதல் – பொருளாதார தடை இவற்றால் – விரக்தியடைந்திருந்த மக்கள் – குடாநாட்டின் மேலான இந்திய விமானப்படையின் பிரசன்னம் – உக்கிரமாக நடைபெற்ற வடமராட்சி மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டமை போன்ற சம்பவங்களால் உணர்ச்சி வசப்பட்டவர்களாக – மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதனை தொடர்ந்து – சிறி லங்கா அரசின் அனுமதியுடன் நிவாரணப்பொருட்கள் அடங்கிய கப்பலொன்று – KKS துறைமுகத்திற்கு வந்தது. இந்தக்கப்பலில் கொழும்பு இந்திய தூதரகத்தில் First Secretary ஆகவிருந்த – Hardeep Singh Poori – தற்போது இந்திய மத்திய அமைச்சராக உள்ளவர் – யாழ் வந்தார். புலி முக்கியஸ்தர்கள் ஐவர் – யோகி தலைமையில் பூரியை சந்தித்தனர்.
19-07 – 1987 – பூரி மூன்றாவது முறையாக – பலாலி வந்தார்- அதற்கிடையில் கப்பல் மூலம் பலதடவைகள் நிவாரணப்பொருட்கள் விநியோகம் நடைபெற்று கொண்டிருந்தது. இம்முறை பூரி பிரபாகரனையும் சந்தித்தார். அப்போது – சிறி லங்கா அரசு – தமிழர் அபிலாசைகளை ஓரளவு கருத்திலெடுத்து – வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைப்பது உட்பட – ஒரு தீர்வு திட்டத்திற்கு இணங்கும் நிலையில் இருக்கிறது – இது தொடர்பாக பிரபாகரன் டெல்லிக்கு வரவேண்டும் என்ற பூரியின் அழைப்பை – பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். (Inside an Elusive Mind – M .R -நாராயணசாமி )
22-07-1987: ராஜிவ் காந்தி யின் அறிவுறுத்துதலுக் கிணங்க – பிரபாகரனை விமான மூலம் இந்தியாவிற்கு அழைப்பதென அறிவிக்கப்பட்டது.
23- 07 – 1987- பூரி நான்காவது தடவையாக விமானப்படை அதிகாரி – Captain Gupta – வுடன் யாழ் வந்து LTTE தலைவர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினார். இந்த பேச்சில் வடமராட்சியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்ததாக – LTTE பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தது. –
ஒரு அரசாங்கம் -அயல்நாட்டு அரசாங்கத்திடம் இராணுவத்தை வெளியேற்றுதல் பற்றி கேட்கமுடியாது- கேட்காது – என்பது LTTE இற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
மேற்படி கூட்டத்தில் பிரபாகரனின் பயண ஒழுங்குகள் பற்றியே பேசப்பட்டது – அதில் குறிப்பாக – பிரபாகரனுடன் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – மற்றும் யோகி – திலீபன் ஆகியோரும் இணைந்து கொள்ளவேண்டும் எனவும் – சென்னையில் இருக்கும் பாலசிங்கமும் பிரபபாகனும் டெல்லி செல்லுவதற்கு முன்னர் முதல்வர் MGR ஐ சந்திக்கவேண்டும் – என்கின்ற கோரிக்கைகளே – முன்வைக்கப்பட்டது. (Inside an Elusive Mind – M .R -நாராயணசாமி )
24- 07-1987- LTTE முன்வைத்த மேற்படி கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டு – பிரபாகரன, யோகி ஆகியோர் சென்னையூடாக டெல்லி பயணமானார்கள். பிரபாகரனுடன் திலீபனும் பயணித்தாரா என்பது – உறுதியாக தெரிய வில்லை. அதுபற்றி தெரிந்தவர்கள் அத்தகவலை இங்கே பகிரவும்.
பயணமாகுமுன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரபாகரன் தமிழர்களின் பிரதிநிதியாக டெல்லியில் வரவேற்கப்படுவது பற்றி திருப்தி தெரிவித்தி ருந்ததுடன்- தமிழ் மக்களுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இங்கு முக்கியமாக – பிரபாகரனும் LTTE யும் தமிழ் மக்களின் ஏக தலைமையாக இந்தியா அங்கீகரித் திருக்கிறது என்கின்ற தொனி – அவரது பேச்சில் இருந்தது. யாழ் பத்திரிகை களும் அவ்வாறான ஒரு பிம்பத்தை கட்டியமைத்தன.
டெல்லியில் பிரபா – பாலசிங்கம், பண்டுருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ராஜீவை சந்தித்தனர்.
இதேவேளை TULF – TELO – PLOTE – ENDLF- EROS – EPRLF – தலைவர்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு – தீர்வுத்திட்டம் பற்றி அவர்களுக்கும் கூறப்பட்டது. வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் – TULF ஐயும் ஏனையவர்களையும் இந்திய அரசு டெல்லிக்கு அழைத்திருந்தமையே பிரபாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய முக்கிய காரணி என்றே நம்பப்படுகின்றது.
(தொடரும்….)