1956ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற திரு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர், சமஸ்டியைத் தமது மாநாடுகளிலும் அறிக்கைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டாலும், அவ்வப்போது கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், 1961ல் இரண்டுமாத மறியல் போராட்டம் என நடத்திய போதிலும், பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து, தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து, அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்புகள் மற்றும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேலாதிக்கம் பற்றிய ஒப்பாரிகளோடும் தமிழ் மக்கள் மத்தியில் மேடைகளில் வெள்ளை வேட்டி கட்டி முழங்கிய வீரவசனங்களோடும் காலம் கடந்ததே 1970 வரையான தமிழர் அரசியல்.
1970களில் தமிழீழ விடுதலை – ஈழப் பரட்சி – ஆயதம் தாங்கிய போராட்டம் என தலைதூக்கி செயற்பட்ட தமிழ் இளைஞர்களின் இளவயது உணர்ச்சிமிகு அறிவுக்குப் பின்னாலேயே சட்ட அறிவும் பாராளுமன்ற அரசியல் அநுபவமும் கொண்ட மூத்த தமிழர் அரசியற் பிரதிநிதிகளும் தமது அரசியல் வண்டியை கட்டிக் கொண்டு பயணம் செய்தனர். அதனது வெளிப்பாடே 1976ம் ஆண்டு வட்டுக் கோட்டை மாநாட்டுத் தீர்மானம். தமது பகுத்தறிவுக்கும், தர்க்க ஆற்றலுக்கும் கடைப்பிடித்து வந்த அரசியற் செயற்பாட்டு வழிமுறைக்கும் தொடர்பில்லாத ஓர் அதிதீவிர அரசியற் தீரமானத்தை மேற்கொண்டமையானது, அந்த தீர்மானத்தை இலக்காகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கத்தை அணி திரட்டுவதற்காகவா என்றால், இல்லைவேயில்லை, அது வெறுமனே 1977ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியை அடைவதற்கான குறுக்கு அரசியல் மட்டுமே என்பது வெளிப்படை. அந்த வட்டுக் கோட்டை தீர்மானத்தை இப்போது மீள் வாசிப்பு செய்வதில் அர்த்தமில்லை. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்களே அதனை மூன்று ஆண்டுக்குள் மறுதலித்து, மறந்து போய், மாவட்ட சபைகளை ஏற்றதை நினைவிற் கொள்வது அவசியம்.
1983ம் ஆண்டு லட்சக் கணக்கில் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகப் போனதுவும், தமிழ் இளைஞர் இயக்கங்களின்; ஆயுதங்கள் தாங்கிய போராட்டத்தின் தீவிரமும், இந்தியாவின் காத்திரமான ஈடுபாடும் கடைசியில் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் ஒன்றாக மாகாண ஆட்சி முறையை அரசியல் யாப்பு பூர்வமாக புகுத்தின. “இது இந்தியாவினால் இந்தியாவின் நலன்களுக்காக திணிக்கப்பட்ட ஒன்று:”, “இது தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்று அல்ல”, “இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்டவில்லை”, “இந்த மாகாண ஆட்சிக்கான அதிகாரங்கள் 1987ம் ஆண்டு இருந்தது போல இன்று இல்லை, அது குறைக்கப்பட்டும் கரைக்கப்பட்டும் கோதாகப் போய் விட்டது”, “அறிமுகப்படுத்தப்பட்டு 38 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத இந்த மாகாண ஆட்சி முறையை இப்பொழுது முழுமையாக நிறைவேற்று என்று கேட்பதில் என்ன பயன்” இப்படியாக பல தொடர் கேள்விகளைக் கொண்டதாக விவாதங்கள் மட்டுமே தமிழர்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளன.
இப்போது ஒரு புறத்தார் “சமஸ்டியைத் தவிர வேறெதனையும் தொட்டும் பார்க்க மாட்டோம்” என கூறுவது மட்டுமல்ல, இப்போதிருக்கும் மாகாண ஆட்சிமுறை ஒழிந்து போக வேண்டுமென விரதம் இருக்கின்ற விடாக்கண்டர்களாகவும் உள்ளனர்.
இன்னொரு புறத்தார், போன பாராளுமன்றத் தேர்தலில் விட்டதைப் பிடிப்பதற்கு எப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் வரும் என தவம் இருக்கிறார்கள். வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட அணியாக ஒன்றுபட்டு உறுதியான ஆட்சியை அமைப்பார்களா என்ற சந்தேகம் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்க, மறுபுறம், இவர்கள் மாகாண ஆட்சி தொடர்பில் அதற்கான அதிகாரங்களை முழுமையாகவும் முறையாகவும் பெறுவது தொடர்பில் எவ்வளவுக்கு அக்கறையாக இருக்கிறார்கள்? அதற்கு எவ்வகையாக செயற்படப் போகின்றார்கள்? என்ற தொடர் கேள்விகளும் எழுகின்றன. இலங்கை அரசின் ஆட்சியில் இருப்போர் மனமுவந்து ஏதாவது தந்தால் சரி. இல்லையென்றால், கிடைக்கின்ற மாகாண சபைக் கதிரைகளோடும் அமைச்சர்கள் என்னும் வசதிகள் சலுகைகளோடும் ஒட்டியிருந்து கொண்டு, “அரசாங்கம் அதிகாரங்கள் தரவில்லை”, “அரசாங்கம் நிதி தரவில்லை”, “மாகாண அதிகாரங்களை ஆளுநரே வைத்திருக்கிறார், ஆனபடியால் எதுவுமே செய்ய முடியவி;ல்லை” என்ற குற்றச் சாட்டுகளோடு அதற்கு அடுத்த தேர்தலுக்கு தயாராவார்கள் என்றே இன்றைய தமிழ்க் கட்சிகளின் அரசியலை அடையாளமிட வேண்டியுள்ளது.
பின்னே வரும் யானைக்கு
முன்னே அடிக்குது மணியோசை
இப்போதுள்ள மாகாண ஆட்சி முறையின் இடத்தை கிராம சபைகள் மூலம் பிரதியீடு செய்கின்ற நிலையை நோக்கிய அரசியலையே சிங்கள பேரினவாதம் நீணடகாலமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. இந்த சிந்தனையை முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய தனது கனவாக புதிய அரசியல் யாப்பு வரைவில் எழுதிக் கொண்டிருந்தார் – போய்விட்டார்.. அதுவேதான் இப்போது ஜனாதிபதி அநுராவின் ஆட்சியில் “அடித்தட்டு மக்களுக்கே அரசியல் அதிகாரம்” என்ற சுலோகத்துடன் “பிரஜா சக்தி” என்ற வடிவத்தில் முன்னகர்த்தப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. அநுரா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இது சட்டங்களால் உரமூட்டப்பட்ட வலுவான அடிமட்ட அதிகார நிறுவனமாக முழுமையடைகிறதோ இல்லையோ, நிச்சயமாக, அடுத்த தடவை ஆட்சியைப் பிடிக்கப் போகின்ற சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது மேலாதிக்கத்துக்கு வசதியாக – தமக்கேற்ற விதத்தில் அரசியல் பூர்வமான அதிகார கட்டமைப்பாக அதனை மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மாகாண சபைகள் தொடர்நது அரசியல் யாப்பில் இருந்தாலும் கூட, அவற்றினதும் மற்றும் உள்ளுராட்சி சபைகளினதும் அதிகாரங்கள் மீது காலப் போக்கில் இந்த “கிராம சபைகள்” கணிசமாக செல்வாக்கு செலுத்தும் என்பதோடு, இப்போது அரச அதிகார கட்டமைப்பில் ஏதோவொரு குறிப்பிட்ட அளவிலாயினும் பங்காளர்களாக இருக்கின்ற பிராந்திய கட்சிகளையும் மற்றும் தேசிய அளவிலான மாற்றுக் கட்சிகளையும் அந்நியப்படுத்தும் என்பதையும் இப்போதே கணிக்க முடியும்.
இந்தப் போக்கை தமிழர் தரப்பால் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவை நம்ப முடியாது – நம்பக் கூடாது என மூச்சுக்கு முன்னூறு தடவைகள் உச்சரிக்கின்ற தமிழ்த் தேசக்காரர்கள், “இலங்கை அரசு இவ்வாறு செய்வதை இந்தியா அனுமதிக்காது – தடுத்து நிறுத்தும்” என நம்புவதே பத்தாம் பசலித் தனம். “இல்லையில்லை இந்தியா தனது நலனுக்காக அதனைத் தடுத்து நிறுத்தும்” என்று சொன்னால் இந்தியாவின் நலன் தமிழர்களின் நலன்களுக்கு அவசியம் என்றல்லவா ஆகி விடும். இது முரண்பாடான சிந்தனை என்பதை விட தமழர்கள் மத்தியில் நிலவும் போலித்தனமான – போக்கிலித்தனமான சிந்தனையென்றே கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், தேர்தல் எப்போது வரும் – அதன் வெற்றிக் கனிகளை எப்படிப் பறிக்கலாம் என்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களுக்கு இந்தியாவே பொறுப்பு என சொல்லி விட்டு தாங்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பது வேதனைக்குரியது.
“உரிமைகள் மீது படுத்திருப்பவனுக்கல்ல, விழிப்பாய் இருப்பவனுக்கே சட்டம் துணை செய்யும்” என நீதித்துறைக்கான கோட்பாடடில் ஒரு வாக்கியம் இருக்கிறது. இலங்கைத் தமிழர் சமூகம் இந்த மாகாண ஆட்சி முறையை தவற விட்டால் பரிணாமமாகும் கிராம ஆட்சி முறையை அங்கீகரித்து, ஏற்று தமது அரசியல் சமூக பொருளாதார நலன்களை அதனூடாக காப்பாற்றிக் கொள்வதற்கு இப்போதே இலங்கைத் தமிழர் சமூகம்; மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்..