‘அமீனா புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த வீடும் உருப்படாது!’

அமீனா நுழைந்த வீடு என்பதையாவது ஒப்புக்கொள்ளலாம். ‘அ’வுக்கு ஆவன்னா போடவேண்டுமென்ற மொக்கை மோனைக்காக ஆமையை பழி சொல்வது அட்டூழியம் இல்லையா? பிராணிகளிலேயே அப்பிராணி இல்லையா அது?

இனி, ஆமைக்கு பதிலாக,

அதே பழமொழி ரிதத்திலேயே

நானொரு புதுமொழி சொல்கிறேன்.

‘அமீனா புகுந்த வீடும்

அமெரிக்கா புகுந்த வீடும்

உருப்படாது!’

இரான், இராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா,பாலஸ்தீனம்….

என்று வரலாறைப் புரட்டினால்

அமெரிக்கா நிர்மூலமாக்கிய நாடுகளின் பட்டியல் நெடுகக் கிடைக்கும்.

நான் முன்னரே குறித்ததுபோன்று,

இப்போது அமெரிக்காவின் ‘கவர்ச்சிக்கு’ இரையாகியிருக்கிற உக்ரெய்ன் செலென்ஸ்கிக்கும், ஆட்டுவிக்கும் அமெரிக்க நேட்டோ கூட்டத்துக்கும்

எந்த இழப்பும் நேரப்போவது இல்லை.

மாட்டிக்கொண்டு,

உயிரிழந்தும், உடைமையிழந்தும்,

துயரில் அல்லலுறுபவர்கள்

அப்பாவி உக்ரெய்னிய குடிமக்கள்தான்.

இந்தப் போர்ச் சூழலினூடே

நிறைய நாடகங்கள் பார்த்தோம்.

ரஷ்யன் எங்கள் வானத்தில் பறக்கக் கூடாது என்றான் ; பொருளாதாரத் தடை என்றான். புட்டினின் குங்ஃபூ சட்டையைக் கழட்டிவிட்டோம் என்றான்; ரஷ்யாவில் ஆப்பிள் விற்கமாட்டேன் என்றான்; விளையாட்டில் அவனை சேர்க்கமாட்டேன் என்றான்.

ரஷ்யனோ, ‘பொருளாதாரத் தடையெல்லாம் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால் கில்லி விளையாடக்கூட அனுமதிக்க மாட்டேன் என்பதை எதிர்பார்க்கவில்லை’ என்று எக்களித்துச் சிரிக்கிறான்.

அவன் அமெரிக்கன் நேட்டோ மாதிரி பிஸ்க்கோத்துகளை செய்தியாக்கவில்லை. ஒரேயடியாக, அணுகுண்டைத் துடைத்து வைக்கச் சொல்லிவிட்டேன் என்கிறான்; அமெரிக்காவுடன் விண்வெளி உறவே கிடையாது போ என்கிறான். என்னிடம் எஞ்சின் வாங்கித்தானே ராக்கெட் ஒட்டினாய், இனிமேல் தரமாட்டேன், மந்திரக்கதை சூனியக்காரி மாதிரி துடைப்பக் கட்டையில்தான் நீ இனி ஏறிப் பயணிக்கவேண்டும் என்று கேலி செய்கிறான்.

ஆயிற்றா?

அடுத்த மாசம் பாருங்கள்.

தடைகள் விலக்கிக் கொள்ளப்படும்; ரஷ்யாவோடு அமெரிக்கா புதிய யாவார ஒப்பந்தம் போடுவான்; ஆப்பிள் கணிப்பொறி விற்கத் தடை இல்லை என்பான் ; நட்புறவு என்பான்; புட்டின் கையைப் பிடித்துக் குலுக்குவான்.

ஜெயித்தாலும் கொண்டாட்டம்; தோற்றாலும் கொண்டாட்டம் என்று விளக்கொளியில் ஜ்வலிக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள்ளிருந்து

“வாட் நெக்ஸ்ட்?” என்று

சிஐஏவுடன் உரையாடிக் கொண்டிருப்பான்.

உலக கோடௌனில் எண்ணிக்கை குறைந்துவிட்ட வெடிகுண்டுகளும் ரைபிள்களும் டாங்குகளும்

ராக்கெட் லாஞ்சர்களும் மானாவாரியாகத்

தயாரிக்கும் பணி முடுக்கி விடப்படும்.

அடுத்த ஊர் எந்த ஊர் என்றும்,

அடுத்த செலென்ஸ்கி எங்கேயிருக்கிறான் என்றும் அமெரிக்க பெண்டகன்காரன்

உலக மேப்பை விரித்துக்கொண்டு

பூதக்கண்ணாடியால் மேய ஆரம்பித்திருப்பான்.

எல்லாம் பழையபடி நார்மலாகிவிடும்.

ஆனால் வெடிகுண்டுப் புகையும்,

நிர்மூலக் கட்டடங்களும், சேதாரமடைந்த தெருகளும், இழவு வீடுகளின் மயான அமைதியுமாக –

உக்ரெய்ன் கண்ணீர் ததும்பத்

தள்ளாடி நடக்கும்.