அமெரிக்க டாலரைக் கை கழுவும் ஆசியான் நாடுகள்!

சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) கணக்குப்படி, இந்த நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டுகிறது. இந்த நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் இந்தோனேசியாவில் நடை பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய இந்தோனேசி யாவின் ஜனாதிபதி விடோடோ, “உள்ளூர் கடன் அட்டைகளை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வெளிநாட்டு நிதிப்பரிமாற்ற அமைப்புகளைத் தவிர்க்கலாம். உக்ரைன் சச்சரவைக் காட்டி ரஷ்யாவின் நிதித்துறை மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலைமைகளைச் சமாளிக்க நமது நாடுகளுக்குப் பாது காப்பு வளையம் தேவைப்படுகிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், “மேற்கத்திய நிதிப் பரிமாற்ற அமைப்புகளிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டியது தேவையாகி விட்டது. நாம் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். ரஷ்யா மீது அமெரிக்கா போட்ட தடைகளை நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்றவை பிரச்சனைகளாக மாறலாம்” என்று குறிப்பிட்டார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரிய பொருளாதாரமான பிரேசில், சீனாவுடன் ஒரு உடன் பாட்டை எட்டியிருக்கிறது. இரு நாடுகளுக்கிடை யிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின்போது அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் இருக்கப் போகிறார்கள். மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளான இராக், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் சவூதி அரேபியா போன்றவை அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.

பிரிக்ஸின் புதிய நாணயம்

முன்னேறி வரும் பொருளாதாரங்களான பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயம் கொண்டு வருவது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் துணைத்தலைவர் அலெக்சாண்டர் பாபாகோவ் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க நகரம் டப்ளினில் நடைபெற விருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அந்தப் புதிய நாணயம் பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை யும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையும் கொண்டவையாகும்.