அல்ஜீரிய பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானம்

1830 – 1962 காலனிய காலப் பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதைக்கு ஆளானவர்கள், அத்தோடு அந்த நாட்டின் பூர்வ குடிகளான முஸ்லிம் மக்களை பெருமெடுப்பில் வெளியேற்றியமை,உடல் உள சித்திரவதைக்கு மக்களை உள்ளாக்கியமை போன்ற மனித உரிமை மீறல்களுக்கும் வளங்களை களவெடுத்ததன் மூலம் பொருளாதார சுரண்டலால் நாட்டை சிதைத்ததிற்கும் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

சுமார் 1.5 மில்லியன் மக்கள் காலனியவாதிகளால் கொல்லப்பட்டார்கள் என அல்ஜீரியா கூறுகிறது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள் சுமார் 5 இலட்சம் இறப்பு என்கின்றனர்.

அல்ஜீரிய பாலைவனத்தில் அணுவாயுத பரிசோதனையை பிரான்ஸ் செய்தது. இப்போதும் அந்த பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் அதன் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது.

இதனால் காலனியம் ஒரு குற்றச் செயல் என்பதை அல்ஜீரியாவும் வலியுறுத்திச் சொல்கிறது. மேற்கு ஐரோப்பிய காலனிய ஆதிக்கமானது அவர்கள் பிடித்து வைத்திருந்த நாடுகளை இறைமையுள்ள நாடுகளாக நீடித்து இருக்க முடியாதபடி தங்கிவாழ்தல், பிரித்தாளல், கோடுபோட்டு நாடுகளின் எல்லைகளை பிரித்தல், எடுபிடி ஆட்சியை நிறுவி நவகாலனியத்தை தொடர்தல் என இன்றுவரை பாதிப்பை உள்ளாக்கியபடி இருக்கிறது.

இன்று உலகின் பெரும்பாலான எல்லைப் பிரச்சினைகளுக்கும் உள்நாட்டு வெளிநாட்டு போர்களுக்கும், ஏன் இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கும் (பிரித்தானிய) காலனியமே காரணம்.

2023 இல் மக்ரோன் அல்ஜீரியாவை காலனியாக்கியது மனிதத்துக்கு எதிரான குற்றம் (crime against humanity) என ஒப்புக்கொண்ட போதிலும், பிரான்ஸ் நாட்டின் சார்பில் மன்னிப்பு கேட்க மறுத்திருந்தார். “அதற்கான மன்னிப்பை என்னிடம் கோர முடியாது” என கூறியுமிருந்தார்.

அல்ஜீரிய பாராளுன்ற சபாநாயகர் இப்ராஹிம் பௌஹாலி அவர்கள் “இது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒரு தெளிவான செய்தியை முன்வைக்கிறது. அல்ஜீரியாவின் தேசிய நினைவானது அழிந்துவிடக் கூடியதல்ல. மேலும் அது விவாதத்துக்கோ பேச்சுவார்த்தைக்கோ உட்படுத்தக் கூடியதுமல்ல” என்கிறார்.

ஆம். காலனிய ஆட்சியிலோ தேசிய அரசு ஆட்சியிலோ ஓர் இனத்தை அல்லது மக்கள் கூட்டத்தை இனப்படுகொலையோ கூட்டுப் படுகொலையோ செய்தவர்கள் யாராகிலும் எந்த அரசாங்கம் ஆயினும் இந்த செய்தியை கவனத்தில் எடுக்காமல் “நாம் அதை செய்யவில்லை. நாம் ஏன் பொறுப்பு கூற வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தாண்டிச் செல்லலாம். அல்லது கள்ள மவுனம் சாதிக்கலாம்.

ஆனால் வரலாற்று நினைவு இலகுவில் அழிந்துவிடக் கூடியதல்ல. அது நாடுகளுக்கு இடையில் அல்லது உள்நாட்டில் ஒற்றுமையை/மனந்திறந்த உறவை சமூக பொருளாதார வளர்ச்சியை பேண தடையாகவே இருக்கும்.

இலங்கை அரசுக்கும் இந்த செய்தி பொருந்தக் கூடியதுதான்.
அல்ஜீரியா காலனியப்பட்ட நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி வழிகாட்டி உள்ளது. ஒற்றைத்துருவ அரசியல் தகர்வினது ஒரு வெளிப்பாடாகவும் இதை நோக்க முடியும்.