இந்த அழிவிற்கு நியாயங்கள் எங்கும் இல்லை

தாக்குதல், மறு தாக்குதல் என்று இது எங்கு போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை. நம் காலத்தின் ஹிட்லரை அமெரிக்கா கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.

போர் நிறுத்தத்திற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஒற்றை ஆளாக வீட்டோ அதிகாரத்தை அது பயன்படுத்தியபோது, கைதூக்கிய பெண்ணின் முகம் இறுகிப் போயிருந்தது. மனித குலத்திற்கு எதிரான கறைபடிந்த அந்தக் கரங்களில் அப்போது குருதி படிந்திருந்தது.
இப்போது கூட, சக்தி வாய்ந்த மேற்கு நாடுகள் நீதி, நியாயம் பற்றி கொஞ்சமேனும் அக்கறை கொள்ளவில்லை.

தங்கள் கூட்டாளிகளின் பக்கம் சேர்ந்துகொண்டு, ஒருதலைப் பட்சமாக கோரஸ் பாடுகிறார்கள்.

நம் வாழ்நாளில் காணாத, மிக இழிந்த அரசியலுக்குப் பின்னால் அணி திரண்டு, புவிரசியலின் பேரில் கயிறு திரிக்கிறார்கள்.

இதில் மிகக் கேவலமான பங்காளிகள் மத்திய கிழக்கு நாடுகள்தான். பிழையான தெரிவின் பக்கம் சேர்ந்துகொண்டு, அரசியல் தற்கொலைக்கு முழுப் பிராந்தியத்தையும் இட்டுச் செல்கிறார்கள்.

இதைவிடச் சரணாகதி அரசியல் இருக்குமா என்று தெரியவில்லை. டிரம்பின் காலடியில் டிரில்லியன் கணக்கில் பணத்தையும் பரிசுகளையும் கொட்டிவிட்டு, பேரழிவை விலைக்கு வாங்குவது எவ்வளவு கேவலமான வங்குரோத்துத்தனம்? எவ்வளவு இழிவான வரலாற்று முரண்?

ஆனால், இதில் ஒரேயொரு ஆறுதல்- விதிவிலக்கு, உலகெங்கும் உள்ள நியாயத்தை நேசிக்கும் மக்கள் மட்டுமே.

அவர்கள்தான் நீதி இன்னும் செத்துவிடவில்லை என்று உலகத்து நகரங்களில்- ஊடகங்களில்- ஓங்கி முழங்குகிறார்கள்!

ஒரு பேரழிவுக்குப் பின்னர்தான் நியாயம் பிறக்கும் என்பதுதான் விதி என்றால் என்ன செய்வது?

புயலுக்குப் பின்னரான அமைதிக்கு உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. நாமும் எதுவும் செய்ய இயலாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருகிறோம்.

காலம் தீர்க்கும் கணக்கிற்காக நாம் காத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
உள்ளூர் அரசியலை விட, சர்வதேச அரசியல் சந்தர்ப்பவாதத்தாலும் சரணாகதியாலும் சோரம் போதலாலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது கடைநிலைக்குச் சென்றிருக்கிறது.

பசி பட்டினியின் அகோரத்தால் கால்கள் சூம்பிப் போன, உடல்கள் தளர்ந்து வலுவிழந்து போன பலஸ்தீனக் குழந்தைகளின் சாபம், உங்கள் யாரையும் சும்மா விடாது.

போரில் இறந்துபோன அப்பாவி உயிர்கள் நிச்சயமாக உங்களைப் பழிதீர்க்கும்.

வரலாற்றில் முன்னர் நிகழ்ந்த மங்கோலியர்களின் – தாத்தாரியர்களின் படையெடுப்பு காலம் போலவே, மத்திய கிழக்கின் தற்கொலை அரசியல் தேர்வு இருக்கிறது. வரலாறு மீள்கிறது. அதுதான் பெருந்துயரம்.
வளைகுடா யுத்தம், பொஸ்னிய இனப் படுகொலை, றுவாண்டா படுகொலைகள், முள்ளிவாய்க்கால் படுகொலைகள்… என்று நம் காலத்தில்தான் எத்தனை பேரழிவுகள்! எத்தனை இன அழிப்புகள்!!

உலகம் இதைத் தாங்காது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
மத்திய கிழக்கின் போர் மேகங்கள் நம்மையும் மிக ஆழமாகப் பாதிக்கும்.

அங்கு வாழும் நமது உறவுகள், நமது பொருளாதாரத்திற்கான அவர்களது பங்களிப்புகள் பற்றிய கவலைகள் இல்லாமல் இல்லை.
பெற்றோல் விலை அதிகரிப்பு ஏற்படுமாயின், நாடு தாங்காது. ஏன் உலகமே தாங்காது.

போர் வேண்டாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. போர் வெறி பிடித்த வன்கொடூரர்களின் காதில் அது விழப் போவதுமில்லை.
வரலாற்றின் மற்றொரு கசப்பான பக்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறோம்.