பிரான்ஸ் கொந்தளிக்கிறது!

தனது வலதுசாரிக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முயலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் எழுச்சியுடன் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மக்ரோனின் ஓய்வூதியத் திட்டத்திற்கு பிரான்ஸ் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அதற்கு எதிரான முதல் போராட்டம் ஜனவரி 19 ஆம் தேதியன்று தொடங்கியது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் பிரான்சின் பிரதான வீதிகளில் நடந்த பேரணிகளில் பங்கேற்றனர்.தற்போது ஓய்வு பெறுவதற்கான வயது 62 ஆக உள்ளது. இதை 64 ஆக உயர்த்த மக்ரோன் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இந்த மோசமான ஆலோசனையோடு மக்ரோன் நிற்கவில்லை. அவர்கள் அடுத்தகட்டத்திற்கும் நகர்த்தியிருக்கிறார்கள்.

ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதோடு, ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு செலுத்தும் காலத்தை 43 ஆண்டுகளாக அதிகரிக்கப் போகிறார்கள். 2027ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பங்களிப்புக் காலம் அதிகரிக்கும். ஓய்வு பெறுவதற்கான வயது அதிகரித்திருப்பது பலரின் முதுமைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு, 43 ஆண்டுக்கால பங்களிப்பு என்றால் குறைந்தது 21 வயதில் இருந்து அதைச் செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிலை உருவாகப் போகிறது.இந்த அம்சங்களால் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று நடந்த நாடு தழுவிய பேரணிகளிலும் லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நாடு முழுவதும் 268 நகரங்களில் இந்த கண்டனப் பேரணிகள் நடந்திருக்கின்றன. காவல்துறை வட்டாரங்களே எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இவற்றில் பங்கேற்றதாகக் கூறுகின்றன. காவல்துறையினரின் எதிர்மறை நடவடிக்கைகளையும் தாண்டி அமைதியாகவே இந்தப் பேரணிகள் நடந்து முடிந்துள்ளன.எங்கு நோக்கிலும் மக்கள் தலைகளாகவே இருந்தன என்று தொழிற்சங்கங்கள் கூறியிருக்கின்றன.

புதிய திட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த தொழிற்சங்கத் தலைவர் மார்டினெஸ், “காலம் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கழிக்க விரும்புவது மட்டுமல்லாமல், கொஞ்சம் கூடுதல் காலம் வாழலாம் என்றும் நினைக்கிறோம்” என்றார். ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான லாரென்ட் பெர்ஜெர் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்ததில்லை. நாங்கள் உரக்கச் சொல்ல விரும்புகிறோம். இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஊதியமும் குறைவு

இந்தப் பேரணிகளில் ஆசிரியர்களும், ரயில்வே தொழிலாளர்களும் பெருமளவில் பங்கேற்றிருக்கிறார்கள். புதிய திட்டத்தால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்று மேலும் பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஓய்வூதியம் மட்டுமின்றி, ஊதியமும் தற்போதைய விலைவாசி உயர்வைத் தாக்குப்பிடிக்கும் அள வுக்கு வழங்கப்படுவதில்லை.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையுயர்வு மற்றும் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. ஓய்வூதியம் வழங்குவது சிரமமானதாக மாறிவிட்டது என்ற மக்ரோன் தலைமையிலான நிர்வாகத்தின் காரணத்தை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன. உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தமேயில்லாமல் ஆயுதங்களைத் தருகிறோம் என்று கூறி, மக்கள் மீது நெருக்கடியை உருவாக்கியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரான்ஸ் கொந்தளிக்கிறது!

(Maniam Shanmugam)