புலம்பெயரும் தொழிலாளர்களைக் கணக்கெடுத்தால் என்ன?

கடந்த சில ஆண்டுகளாகத் தென் மாநிலங்களுக்கும், குஜராத், மஹாராஷ்டிரம் ஆகிய மேற்கு மாநிலங்களுக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்கிறார்கள். இவர்கள் பிஹார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், அசாம் முதலான வடமாநிலங்களிலிருந்து வருகிறார்கள்; மிகுதியும் கட்டுமானப் பணிகளிலும் அங்காடிகளிலும் உணவகங்களிலும் ஆலைகளிலும் விளைநிலங்களிலும் வேலைசெய்கிறார்கள்.

இவர்களில் இருவர்தான் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள். இதே போன்ற ஒரு சம்பவம் நான்காண்டுகளுக்கு முன்னால் (செப்டம்பர் 2018) குஜராத்தில் நடந்தது. 14 மாதப் பெண் குழந்தை ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது. குற்றம் இழைத்தவர் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர். அப்போது இந்தச் சம்பவம் குஜராத்தில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தொழிலாளிகளுக்கும் எதிராகத் திரும்பியது.

சில உள்ளூர் அமைப்புகள் அவர்களை அச்சுறுத்தின. சமூக வலைதளங்கள் வெறுப்பைக் கக்கின. கும்பல் வன்முறை கட்டவிழ்ந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர் பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அடுத்த சில தினங்களில் குஜராத்திலிருந்து சுமார் 50,000 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். நிலைமை சீராவதற்குச் சில மாதங்களாகின.

குஜராத் நிகழ்வோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை. மாறாக, ராமேஸ்வரம் நகராட்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. நகரில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் பெயர் அடையாளம், தொழில், வாழிடம் முதலானவற்றைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பு அவர்களைப் பணிக்கு அமர்த்தியவர்களுக்கும் உண்டு. இதுதான் அறிவிப்பு.

அறிவிப்பைத் தொடர்ந்து பலவிதமான எதிர்வினைகள் எழுந்தன. சமீப காலமாக ரயில், தொலைத்தொடர்பு முதலான துறைகளில், தமிழ் பேசவும் எழுதவும் அவசியமான வேலைகளுக்குக்கூட வம்படியாக வடஇந்தியர்களை நியமித்துவருகிறது ஒன்றிய அரசு.

இது தமிழகத்தில் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறது. அப்படி எரிச்சலுற்ற பலரும் இந்த அறிவிப்பை வரவேற்றார்கள். இன்னும் சிலர் இந்த அறிவிப்பைக் கொண்டாடினார்கள். ‘வந்தாச்சு ஆப்பு’ என்று மகிழ்ந்தார்கள். இவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை எதிரிகளாகப் பாவிப்பவர்கள். இப்படியான மனநிலைதான் நான்காண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் வன்முறையாக வெளிப்பட்டது.

வேறு சிலர், இந்த அறிவிப்பை விமர்சித்தார்கள். இது தமிழர்களின் சகிப்பின்மையை வெளிப்படுத்துகிறது என்றார்கள். ஒரு குடிமகன் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், தொழில் செய்யலாம், அரசமைப்பு அதை அனுமதிக்கிறது. அவ்வாறிருக்க நகராட்சியில் ஏன் தனியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது அவர்கள் எழுப்பிய கேள்வி.

புலம்பெயர்வுகள் ஏன் நிகழ்கின்றன? வளமான மாநிலங்களில் தொழிலாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். திறன் குறைந்த பணிகளை அவர்கள் விரும்புவதில்லை. அந்த வாய்ப்பைப் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒன்றிய அரசுப் பணிக்கு வந்தவர்கள், உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிக்க வந்தவர்கள்; மாறாக கூலிப் பணிக்கு வந்தவர்கள், இங்குள்ள காலியிடங்களை நிரப்ப வந்தவர்கள்.

உள்நாட்டுப் புலம்பெயர்வுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வளமான மாநிலங்களின் முதலாளிகள், அயல் மாநிலத் தொழிலாளர்களை விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்கலாம். அவர்கள் கிடைத்த இடங்களில் தங்கிக்கொள்வார்கள்.

மருத்துவம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி என்று எந்தக் கோரிக்கையும் வைக்க மாட்டார்கள். ஆனால், இது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா? இதை ஒரு மக்கள் நல அரசு எப்படி அனுமதிக்க முடியும்? அதற்குத் திட்டங்கள் போடவும் சட்டங்கள் உருவாக்கவும் வேண்டும். அதற்குத் தரவுகள் வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவில் எத்தனை பேர்? கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் இந்தக் கேள்வி எழுந்தது. அப்போதுதான் வேலையும் தொழிலும் இழந்த இந்தத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தத்தமது ஊர்களுக்கு நடந்தே சென்றனர். குஜராத்தில் 2018-ல் நிகழ்ந்த வன்முறையின்போது சில சமூக ஆர்வலர்கள் இதே கேள்வியை எழுப்பினார்கள்.

2014-ல் சென்னை மெளலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 ஆந்திரத் தொழிலாளர்கள் பலியானபோதும் இப்படி ஒரு கேள்வி எழுந்தது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கு அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. ஏனெனில், அவர்களின் போக்கும் வரவும் இருப்பும் தொழிலும் பதிவுசெய்யப்படுவதில்லை.

இந்த இடத்தில் உள்நாட்டுப் புலம்பெயர்வின் மூலமாகவே உலகின் தொழிற்சாலையாக மாறியிருக்கும் சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்வதன் மூலம் சில படிப்பினைகளைப் பெறலாம். சீனாவின் நகரங்கள்தோறும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றில் பணிபுரிபவர்கள் மிகுதியும் அயல் மாநிலங்களின் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்.

சீனக் குடிமக்களுக்கு அவர்களது ஊராட்சிகள் ஹுக்கூ எனப்படும் குடியுரிமை அட்டை வழங்குகின்றன. இவை அந்தந்த ஊரில்தான் செல்லுபடியாகும். அரசு வழங்கும் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி முதலானவற்றைப் பெற ஹுக்கூ வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலை நிமித்தம் நகரங்களுக்குப் புலம்பெயர்வார்கள்.

அவர்களுக்கு மட்டும் நகரங்களில் பணிபுரிய அனுமதி கிடைக்கும், ஆனால், நகர ஹுக்கூ கிடைக்காது. பிள்ளைகள் தாத்தா – பாட்டியுடன் கிராமங்களிலேயே இருப்பார்கள். புலம்பெயர்ந்த கணவனும் மனைவியும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றக்கூடும்.

அவர்கள் தொழிற்சாலையின் துயிற்கூடத்தில் (டார்மிட்டரி) தங்கிக்கொள்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதம், சீனப் புத்தாண்டின்போது எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒரு மாதம் மூடிவிடுவார்கள். அப்போது எல்லோரும் தத்தமது கிராமங்களை நோக்கிப் பயணப்படுவார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் நகர ஹுக்கூ வழங்குவதற்கு நகராட்சிகள் தயங்குகின்றன. வீட்டு வசதி, மருத்துவமனை, கல்விச்சாலைகள் போன்றவற்றை அதிகப்படுத்திவிட்டு அதற்கேற்ப ஹுக்கூ வழங்குவோம் என்று அவை சொல்லிவருகின்றன.

இந்தியாவின் நிலைமை இதற்கு நேர்மாறானது. இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வேலை தேடிக்கொள்ளலாம். அதை அரசமைப்பு அனுமதிக்கிறது. சரி, ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் நலனையும் ஒரு அரசு பேண வேண்டாமா? அதற்குத் தரவுகள் வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து வந்தவர்கள்? இங்கே அவர்களுக்கு வசிப்பிட வசதிகளும் மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் உள்ளனவா? அவர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுகிறதா? ரயில், பேருந்து வசதிகள் போதுமானவையா? அவர்களால் உள்ளூர் மக்களின் பாதுகாப்புக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்குமா? ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமலாக்கப்பட்டால், இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சகாய விலையில் உணவுப் பொருட்களை வழங்க வேண்டிவரும்; அதற்காகத் தமிழக அரசு செலவிடும் மானியத்தை இந்தத் தொழிலாளர்கள் சார்ந்த மாநில அரசுகளிடமிருந்து பெற வேண்டும். இவற்றையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்வது ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமானது. அதற்குத் தரவுகள் வேண்டும்.

அதற்கான முதற்படிதான் ராமேஸ்வரம் நகராட்சியின் அறிவிப்பு. இது எல்லா நகராட்சிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் உள்கட்டமைப்பையும் வாழிடங்களையும் மேம்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வந்தாரை வாழ வைக்க வேண்டும். அது இங்கு வசிப்பவர்களின் வேலைவாய்ப்புக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்காமலும் இருக்க வேண்டும்.

  • மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.