1993-ம் ஆண்டு: சோமாலியா இல் அமெரிக்கா

ஆனால் முழு விபரம் தெரியாது. அது பற்றித் தேடிய போது சுவாரசியமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.
வரலாற்றின் பக்கங்களில் அமெரிக்கா சந்தித்த மிக மோசமான அவமானங்களில் ஒன்று அது. அதன் பெயர் ‘மொக்டிஷூ போர்’ (Battle of Mogadishu – 1993).

அது 1993-ம் ஆண்டு. ஆப்பிரிக்க நாடான சோமாலியா, பஞ்சத்திலும் உள்நாட்டுப் போரிலும் சிக்கித் தவித்தது. ஐநா சபை அனுப்பிய உணவுப் பொருட்களை மக்களுக்குச் சேர விடாமல், அங்கிருந்த கிளர்ச்சிக் குழுத் தலைவன் முகமது ஃபரா ஐடிட் (Mohamed Farrah Aidid) கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். அவனது அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டுவர, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

நோக்கம் எளிமையானது ஐடிட்டின் முக்கிய இரண்டு ஆலோசகர்களைக் கடத்தி வருவது.

இந்த நடவடிக்கைக்காக (Operation Gothic Serpent) உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவுகள் களமிறக்கப்பட்டன.

Delta Force: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைதேர்ந்தவர்கள்.
Army Rangers: அதிரடித் தாக்குதலுக்குப் பெயர் பெற்றவர்கள்.
160th SOAR: ஹெலிகாப்டர்களை ஓட்டுவதில் கில்லாடிகள்.

அவர்களிடம் இருந்தது அதிநவீன ‘Black Hawk’ ஹெலிகாப்டர்கள். வானில் பறக்கும் கோட்டைகள் என்று அவை அழைக்கப்படும். அமெரிக்கத் தளபதிகள் போட்ட கணக்குப்படி, இது வெறும் 30 நிமிடத்தில் முடிய வேண்டிய ஒரு “Snatch and Grab” (தூக்கு, ஓடு) ஆபரேஷன். ஆனால், தாம் மோதும் எதிரி யார் என்பதை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள்.

அக்டோபர் 3, பிற்பகல். அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு மூலம் இறங்கி இலக்கை நோக்கி விரைந்தன. எல்லாம் திட்டமிட்டபடியே போய்க்கொண்டிருந்தது… அந்த ஒரு சத்தம் கேட்கும் வரை!

சோமாலியப் போராளிகள் நவீன ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை. அவர்களிடம் இருந்தது ரஷ்யத் தயாரிப்பான பழைய RPG-7 (Rocket-Propelled Grenade). ஹெலிகாப்டரின் வால் பகுதியை நோக்கி அவர்கள் அதை ஏவினார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஹெலிகாப்டர் என்று பெருமை பேசப்பட்ட ‘Black Hawk’ (Super 6-1) சுழன்று கொண்டு மண்ணில் விழுந்தது. அமெரிக்கா அதிர்ந்தது. விழுந்த வீரர்களைக் காப்பாற்றப் படைகள் குவிந்தன. சிறிது நேரத்தில், இரண்டாவது ஹெலிகாப்டரும் (Super 6-4) சுட்டு வீழ்த்தப்பட்டது.

30 நிமிட ஆபரேஷன், விடிய விடிய நடக்கும் யுத்தமாக மாறியது. நகரம் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான சோமாலிய ஆயுததாரிகள், விழுந்த ஹெலிகாப்டர்களை நோக்கிப் படையெடுத்தனர். அமெரிக்காவின் எலைட் படைகள், ஒரு அந்நிய மண்ணில், குறுகிய தெருக்களில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுச் சிக்கிக்கொண்டன. இரவு முழுக்கத் துப்பாக்கிச் சண்டை ஓய்யவில்லை.

விடிந்தபோது களம் ரத்தக் களறியாக இருந்தது.

18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். காயம் அடைந்த ஒருவரும் பின்னாளில் மரணமடைந்தார் ஆக கணக்கு 19 என்று வரும்.
73 பேர் படுகாயமடைந்தனர்.

மைக்கேல் டுராண்ட் என்ற பைலட் சிறைபிடிக்கப்பட்டார்.
எதிர்த்தரப்பில் நூற்றுக்கணக்கான சோமாலியர்களும் கொல்லப்பட்டனர்.

ஆனால், அமெரிக்காவை நிலைகுலைய வைத்தது ஒரு காட்சி அங்கு நடந்தேறியது. கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் உடல்களை, சோமாலியக் கிளர்ச்சியாளர்கள் மொக்டிஷூ வீதிகளில் கயிறு கட்டித் தரதரவென இழுத்துச் சென்றனர். அந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானபோது, அமெரிக்காவின் வல்லரசுப் பிம்பம் சுக்குநூறாக உடைந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், கிளிண்டன் உடனடியாகப் படைகளை வாபஸ் பெற்றார். அமெரிக்கா நீண்ட காலத்திற்கு “தரைப்போர்” (Ground War) என்றாலே அலறியது. இதைத்தான் அரசியலில் “Somalia Syndrome” என்பார்கள்.

இன்று வெனிசுவேலாவில் அமெரிக்கா ஜெயித்திருக்கலாம். ஆனால், உயர் தொழில்நுட்பம் மட்டுமே போரில் வெற்றியைத் தந்துவிடாது மண்ணின் மைந்தர்களின் ஆக்ரோஷம் எந்த அதிநவீன ஆயுதத்தையும் முறியடிக்கும் என்பதற்கு மொக்டிஷூவே சாட்சி.