அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு

இவ்வாரத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் அயல்நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய நாட்டு ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது.

அது மாத்திரமல்லாமல், இவ்விடயம் தற்போதும் சமூகவலைத்தளங்களுக்குத் தீனி போட்டு வருகின்றது. சரி, சம்பவத்துக்கு வருவோம்;

15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.

அந்தச் சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பதிவேற்றி, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளிலே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தெல்கொடவைச் சேர்ந்த தாயிடமிருந்தே, அந்தச் சந்தேகநபர், சிறுமியை வாங்கியுள்ளார் எனத் தெரியவந்தது.

அது மாத்திரமல்லாமல், இதனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் பெரும் புள்ளிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்தும் சுமார் 300 பேருக்கு, பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

முதலாவதாகக் கைதாகிய பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அச்சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவைப் பேணிய பெண், ஓட்டோ சாரதி, கார் சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய மற்றும் விளம்பரம் செய்தவர் என 17 பேர் அடுத்தடுத்துக் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்தே, இச்செய்தி காட்டுத்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது.

இச்சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில், இதுவரையிலும் 35 பேர், பொலிஸார், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பல நீதவான் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதலில் சிக்கிய பெரும் புள்ளி, மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்க ஆவார். இவர், ஜூன் 30ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் இருவர் அன்றையதினம் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து கப்பலின் கெப்டன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன், மாணிக்கக்கல் வர்த்தகர் மற்றும் சில சிப்பாய்களும் கைதாகினர்.

அதனையடுத்து, சிறுமியைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இம்மாதம் 04ஆம் திகதியன்று, 45 வயதுடைய மாலைதீவு பிரஜை ஒருவரைக் கைதுசெய்திருப்பதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

எனினும், அதற்கு மறுநாள்தான் இவ்வாறு கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவராவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை மிஹாரு செய்தி சேவை, இலங்கை பொலிஸாரை மேற்கோள்காட்டி வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய ஊடகங்களும் “மாலைதீவின் முன்னாள் நிதியமைச்சர் பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையில் கைது” என முழங்கின.

அத்துடன், அச்சிறுமியைக் கொள்வனவு செய்த 33 வயதான நபர் மற்றும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்காக அறையொன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், சிறுமியை பாலியல் நடவடிக்கைக்கு கொள்வனவு செய்த இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர், அதாவது, வெலிசர கடற்படை முகாமின் இருதய சத்திரசிகிச்சை நிபுணரான லெப்டினன் கொமாண்டரும் இம்மாதம் 06ஆம் திகதி சிக்கினார். இவ்வாறே, பெரும் புள்ளிகளைக் கொண்டு, இப்பட்டியல் நீண்டு சென்றது.

இவர்களில் பாலியல் நடவடிக்கைகளுக்காக இச்சிறுமியை விற்பனை செய்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் அத்தாய் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் மேலதிக நீதவான் லோஹினி அபேவிக்ரம விடுவித்தார்.

இந்நிலையில், இந்தச் சிறுமியின் தாய், மூன்று மாதக் கர்ப்பிணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கடற்படை மருத்துவர், பிரதேச சபையின் துணை தவிசாளர் மற்றும் இரத்தின வியாபாரிகள் இருவர், நேற்று (09) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி, தனது சம்மதத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பினும், இவர் 15 வயதுடைய சிறுமியாக இருப்பதால், சிறுவர் வன்புணர்வுடன் தொடர்புடைய குற்றமாகவே இது இருப்பதாகவும் இதனுடன் தொட்புடையவர்கள் நிச்சம் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்தார்.

தவிர, இச்சிறுமி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்திருந்தால் பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என பெரும் புள்ளிகள் அனைவரும் எளிதாக நழுவியிருப்பர். எனினும், தற்போது சிக்கித் தவிக்கின்றனர்.

அதிலும் கைதாகிய ஒரு பெரும் புள்ளியின் சட்டத்தரணி, தனது தரப்பைச் சேர்ந்தவர், “அறையில் சிறுமியுடன் அவர் இருந்த போதிலும், அங்கு அவர் தவறு எதுவும் செய்யவில்லை. காரணம், ஆண்மைக் குறைபாடுகளுக்கான சிசிச்சையை அவர் பெற்று வருகின்றார்” என வாதாடி, அதற்கான வைத்திய சான்றுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதேவேளை, கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கடற்படையினரால் உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

அத்துடன், மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இரத்துச் செய்துள்ளதாக அதன் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அறிவித்துள்ளார். அத்துடன், குறித்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களின் உரிமையாளர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த 15 வயதுச் சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு, நீதிமன்ற உத்தரவை, தமது பணியகம் பெற்றுள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.

இச்சிறுமி குறித்த விளம்பரம் இணையத்தளத்தில் உலாவியதைப் பார்த்திருந்த ஒருவரே, பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்தே, இவ்விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

தமது அமைச்சின் “1938” அவசர அழைப்புக்கு 2020 ஜனவரி தொடக்கம் 2021 மே மாதம் வரை, 13 சிறுவர் துஷ்பிரயோகங்களும் 404 இணையவழிக் குற்றச்செயல்களும் முறையிடப்பட்டுள்ளதாக, மகளிர், சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறான முறைப்பாடுகள் சொற்ப அளவிலேயே கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்னும் அம்பலத்துக்கு வராமல் எத்தனை எத்தனை மொட்டுகள் கசக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனவே தெரியவில்லை. எனினும், அவர்களும் இவ்வாறான கொடுமைகள் அல்லது அடிமைத்தனங்களில் இருந்து அவசியம் விடுபட வேண்டும்.

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் பெண்களின் விடுதலை உணர்வை ஊட்டிய சமூகத் சீர்திருத்தவாதி மகாகவி பாரதியார் இவ்வாறு பாடியுள்ளார்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு; தழல்

வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?

அவர் தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும் தீப்பொறியை ஏற்றி வைத்தேன். அதன் தாக்கத்தால் அனைவரது மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் எனும் காடு அழிந்தது என்றார்.

அடிமைத்தனக் கொடுமையில் ஆட்பட்டு அதிலிருந்து மீள முயல்வோர்க்கு சிறு பொறியளவிலான விடுதலை வேட்கையே போதுமானது. அச்சிறு பொறி பல்கிப்பெருகி, அதன் தாக்கத்தால் அடிமைத்தனம் நீங்கும்.

அவ்வாறே, இன்று வெளியுலகிற்கு வந்துள்ள இச்சிறுமியின் விடுதலை வேட்கை, இவர் போன்று பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் எதிர்பார்ப்பாகும்.

சிறுவர்களின் பாதுபாப்புக் குறித்து விழிப்புடன் இருப்போம், பொறுப்புடன் நடந்துகொள்வோம்.