இங்கேதான் பொருட் களஞ்சியம் அக்காலங்களில் அமைந்திருந்தது. பழைய யாழ் மாநகர சபை கட்டடத்தினை தாண்டி குருநகர் நோக்கி கடற்கரை வீதியால் வரும்பொழுது வலது கைப்பக்கமாக 80 களின் ஆரம்பம் வரைக்கும் அமைந்திருந்த கட்டிட தொகுதியே பொருட் களஞ்சியமாக அந்நாட்களில் இருந்தது.
இப்பொருட் களஞ்சியத்துக்கு ரயில் மூலமும் கப்பல் மூலமும் பொருட்கள் களஞ்சியப்படுத்துவதற்காக வருவதுண்டு. யாழ் ரயில் நிலையத்திலிருந்து முலவையூடாக திருக்குடும்ப கன்னியர் மடம் அருகாக வந்து பிரதான வீதியில் அமைந்திருக்கும் பெரிய தண்ணீர் தாங்கி அருகாக குருநகர் நோக்கி ஓடக்கரை வழியாக கடற்கரை வீதியை தாண்டி அலுப்பாந்தியின் களஞ்சியம் வரைக்கும் பொருட்களை ஏற்றி வரும் ரயிலுக்காக தண்டவாளம் அந்நாட்களில் அமைந்திருந்ததை பலரும் நினைவில் கொண்டிருப்பீர்கள்.
80 களின் ஆரம்பத்திலேயே சிறிது சிறிதான இராணுவ மற்றும் இயக்க நெருக்குவாரங்கள் காரணமாக பொருட்கள் ஏற்றிவரும் ரயிலின் ஓட்டம் நின்று போயிருந்தது. அதன் காரணமாக பின்னாட்களில் களஞ்சியம் பாழடைந்து கட்டிடங்கள் வெறுமையாக காணப்பட்டன.
இக்களஞ்சியத்திற்கு அரிசி, மாவு, சீனி போன்ற பொருட்கள் மூட்டைகளில் ரயில் மூலமாக வந்திறங்கும். இங்கிருந்தே பின்னர் லொறிகளில் பல இடங்களுக்கும் விநியோகமாகும். 70 களில் கப்பல் மூலமாக வந்திறங்கிய பொருட்களை பெரிய வத்தைகளில் படகுகள் மூலம் இழுத்து வந்து களஞ்சியத்தின் கடற்புறமாக அமைந்த துறை முகத்தினூடாக பத்திரப்படுத்தியதை கண்டிருக்கிறேன்.
குருநகரை அண்டியுள்ள கடல் வத்துக்கடல் (Lagoon )என்பதால் கப்பல் மண்டைதீவை அண்டியுள்ள பெருங்கடலில் நங்கூரமிட்டிருக்க, அங்கிருந்தே பொருட்களை இறக்கி வத்தைகளில் (வத்தை என்பது, இயந்திரம் இல்லாத, பொருட்களை ஏற்றிச்செல்ல உபயோகப்படும் படகு) களஞ்சியத்துக்கு கொண்டு வருவார்கள்.
அலுப்பாந்திக்கு இன்னும் சில விசேடங்கள் உண்டு. RVG பீடி கம்பெனி, RVG ஐஸ்பழ கம்பெனி, மற்றும் ஓடு (Tiles ) செங்கற்கள் செய்கின்ற தொழிற்சாலைகள் பொருட் களஞ்சியத்துக்கு எதிரே இருந்தன.
அத்தோடு அலுப்பாந்தியடி ஆலமரமும் களஞ்சியத்துக்கு முன்பாக கம்பீரமாக நிமிர்ந்து விழுதுகள் விட்டு நின்றது. அலுப்பாந்தியடி ஆல மரத்துக்கும் எனக்கும் ஒரு சென்டிமென்டல் தொடர்புண்டு.
அலுப்பாந்தி தாண்டி கடற்கரை வீதியின் தொடக்கத்தில் ஒரு மரக்காலை இருந்தது. இங்கே மரங்கள் அரிந்து விற்பார்கள். இங்கே motor போட்டு பெல்ட் மூலமே மரங்கள் அரிவார்கள்.
இங்கே மரத்தூள் வாங்குவதற்காக மரக்காலை வேலைகளை நிறுத்தும் மாலை நேரங்களில் சிறுவர்களாக இருந்த நாம் Ball Racer வண்டியில் ஏனைய ஊர்ப்பெடியளோடு சென்று காத்திருந்து வீட்டுக்கு வாங்கி வருவோம்.
இந்த ball Racer வண்டி பயணமே ஒரு சுவாரஸ்யமான ஒன்று. ஒருவரை ஒருவர் வைத்து போட்டிக்கு தெருவால் தள்ளிக்கொண்டு ஓடுவோம். சிலவேளைகளில் இருந்து பயணிப்பவர் தனது கையில் உள்ள வண்டியை இடது வலது நேர் என்று திருப்பி கட்டுப்படுத்தும் தடியை ஒழுங்காக கையாளா விட்டால் தள்ளுகின்ற வேகத்தில் வண்டி தடம் மாறி வாய்க்காலுக்குள் போன கதைகளும் உண்டு.
விளையாட்டு பருவம் எதையும் உடல் ரீதியாக தாங்கிக்கொண்ட வயது அது. சரி, மரத்தூள் எதற்கு என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பெரிய tin களில் மரத்தூளினை போட்டு எரியும் அடுப்பு செய்வதற்கே அந்த மரத்தூளினை வாங்கி வருவோம். ஒரு பொலித்தீன் உரப்பைக்கு 50 சதம் கொடுத்து கிடங்குக்குள் இறங்கி மரத்தூள் அள்ளி நிரப்புவோம்.
மரக்காலையின் பெல்டினை கையால் இயக்குபவர் சின்னப்பு என்ற எங்களூரை சேர்ந்த ஒரு வயதானவர். உடல் வலிமை மிக்கவர். அவரே எமது மரத்தூள் அள்ளும் படலத்துக்கும் பொறுப்பானவர்.
இவ்வாறாக ball racer வண்டி பயணத்தின் பொது நாம் கடந்து செல்லும் ஒரு முக்கியமானவர் இந்த அலுப்பாந்தி ஆலமரம். அதன் விழுதுகளில் தொக்கியிருக்கிறோம். ஆனால் அந்த விழுதுகள் நிலத்தில் ஊன்றியிருக்கவில்லை. விழுதுகள் தெருவோரம் இருப்பதனால் அதனை நிலத்தில் ஊன்ற விடாது மாநகர சபை பார்த்துக்கொண்டது. இன்னொரு காரணம் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காகவும்.
இவ்வாறாக எனக்கும் அலுப்பாந்தி ஆலமரத்துக்குமான தொடர்பு இருந்து கொண்டிருக்கையில் ஒருமுறை நான் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலையான சென் சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் (இப்பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் பிரதான வீதியை அண்டியிருந்தது) ஒரு நாடக நிகழ்வுக்கு என்னை ஆலமரமாக தெரிவு செய்திருந்தார் எனக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களில் ஒருவரான திரேசா டீச்சர்.
நாடகத்தின் (அது ஒரு பாட்டு நாடகம்) கருப்பொருள் எப்படியென்றால், ஒரு குருவி தான் தனது குஞ்சுக்காக கூடு கட்டுவதற்காக தென்னை, வாழை ஆலமரம் என மூறு மரங்களிடம் சென்று அனுமதி கேட்டது. அதற்கு தென்னையும், வாழையும் அனுமதி மறுக்க ஆலமரம் மட்டும் கூடு கட்டுவதற்கு இடம் கொடுக்கிறது.
சில நாட்கள் சென்ற பின் திடீரென புயல் அடிக்கவே குருவி கூடு கட்டுவதற்காக அனுமதி மறுத்த தென்னையும் வாழையும் புயலினால் வீழ்ந்துவிட ஆலமரம் மட்டும் அசையாமல் அந்த குருவிக்கு உதவியதால் புயலிலும் நிமிர்ந்து நின்றது என்பதே பாட்டு நாடகத்தின் கருப்பொருள்.
இதற்காக திரேசா டீச்சர் வாழை, தென்னை ஆலமரம் என்பதை பிரதிபலிப்பதற்காக அந்தந்த மரக்கிளைகளை கொண்டுவரும்படி சொல்லியிருந்தார். வாழை தென்னை இலையும் ஓலையும் இலகுவாக கிடைத்துவிடும். ஆனால் ஆலமர கிளை கிடைப்பது எளிதல்ல.
ஆனால் கிடைத்தாலும் ஏறி ஆலமர இலைகளோடான கிளையை பறிப்பது கடினம். நாடகத்தில் நல்ல வேடம் ஆனால் வேடத்திற்கேற்ற பொருள் இல்லை என்ற கவலை நாடகம் நடக்கும் நாள் மட்டும் இருந்தது.
நாடகம் நடைபெறும் நாள் அன்று நான் பாடசாலைக்கு ஆலமர கிளை இல்லாமல் போக மாட்டேன் என அடம்பிடித்தபடி இருக்க அம்மாவுக்கு அப்பொழுதுதான் அலுப்பாந்தியடி ஆலமரத்தின் நினைவு வந்து எமது பக்கத்து வீட்டில் அம்மா தலை தொட்ட தொட்டமகன் ரேமன் அண்ணாவை கூப்பிட்டு விடயத்தை சொன்னார்.
றேமன் அண்ணா என்னையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நேராக அலுப்பாந்தியடி சென்று என்னை கீழே விட்டுவிட்டு தாவி ஆலமரத்தில் லாவகமாக ஏறி ஒரு பெரிய கிளையையே பிடுங்கி வந்தார். அப்படியே என்னை பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று ஆலமரக்கிளையோடு இறக்கிவிட்டும் வந்தார்.
அன்று நாடகத்தில் நானே ஹீரோவாக ஆலமரத்துக்காக கைதட்டும், திரேசா டீச்சரின் பாராட்டும் பெற்றேன். சின்ன வயதில் எனக்கு பெயர் தந்த அந்த ஆலமரத்தினை ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும்போதும் அலுப்பாந்தியடி எப்படி இன்று மாற்றம் அடைந்திருக்கிறதோ அதேபோல என் நட்பான அலுப்பாந்தி ஆலமரமும் காணாமல் போய்விட்டதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்.
இன்று பொருட்களஞ்சியம் அமைந்திருந்த இடத்தில் இராணுவ கஜபாகு ரெஜிமென்ட் இன் இராணுவ முகாம் மற்றும் அருகே ஒரு சிறிய சைவக்கோயிலும் அமைந்திருக்கிறது.
சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் ஊருக்கு போகும் பொழுது மூன்று வேளை சாப்பாடு செல்லுமிடமெல்லாம் விருந்து என்று உடல் பருமனை ஒரு மூன்று கிழமைகளில் ஏற்றும் படலம் நடைபெறுவதுண்டு.
அதிலும் வண்டி (தொந்தி) வைக்கும் படலம் அடிக்கடி ஏற்படும். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விடிகாலையில் எனது வீடு அமைந்திருக்கும் சவக்காலை சந்தியை அண்டியுள்ள எனது வீட்டிலிருந்து கடற்கரை வீதியாக பண்ணைப்பாலம் தாண்டி மண்டைதீவு சந்திக்கு இடை வரை சுமார் 7 கிலோ மீட்டர் நடை உடற்பயிற்சியை ஒவ்வொரு நாளும் வளமைப்படுத்தி கொண்டேன்.
அப்படியிருந்தும் வண்டி வைக்காமல் இல்லை. குறைவாகவே வைப்பதுண்டு.
சரி இனி எமது அலுப்பாந்தியடி ஆலமரத்துக்கு வருவோம். இவ்வாறான நடைப்பயிற்சியின்போது வழமையான இடங்களை தாண்டி இராணுவ முகாமில் காவலுக்கு நிற்கும் இராணுவ வீரனை பார்த்து அவனும் சிரிக்க நானும் சிரிக்க இன்னும் ஒரு சில நடை பயிலும் உள்ளூர் வாசிகளையும் பார்த்து சிரித்தபடி ஒரு பரஸ்பர வழமைக்குள் நடைப்பயிற்சி நடந்துகொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுகள் சென்றபின் (வெறும் மூன்று வாரங்களே இலங்கை பயணம் அமைவது ) இவ்வருடம் நடை பயிற்சியின் போது எப்படி இந்த சைவக்கோவில் அலுப்பாந்தியடியில் வந்தது என்ற எனது கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது . காரணம் எமது குருநகருக்கு அண்மையாக உள்ள சைவக்கோவில் என்றால் அது முனியப்பர் கோவிலாகவே நான் ஊரிலிருந்த காலங்களில் இருந்தது.
குருநகர் அந்தக்காலத்தில் கிட்டத்தட்ட 99% கத்தோலிக்கர்களை கொண்ட ஊராகவே இருந்தது. ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கத்தோலிக்க கோவில் என்பது போல கோவில்கள் நிறைந்த ஊர். இவ்வாறாக சைவக்கோவிலின் தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.
இராணுவ முகாமின் விரிவாக்கத்தை தடுப்பதற்காக கூட அந்த சைவக்கோவில் அங்கு வந்திருக்கலாம் எனவும் எண்ணினேன்.
இருந்தாலும் அந்த சைவக்கோவிலை (மிகச்சிறிய கோவில்) விடுத்து தமது இராணுவ முகாம் எல்லையை அவர்கள் அழகாக கட்டியிருந்தார்கள். ஊர் மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காகவே ஒரு குடிநீர் குழாயும் அந்த இராணுவ முகாமின் வெளியே மக்கள் பாவனைக்காக போட்டிருக்கிறார்கள்.
சரி, எமது விடயத்துக்கு வருவோம். சென்ற வருடமும் இந்த வழியால் நடை பயிற்சி சென்று வந்திருக்கிறேன். அப்பொழுது எனது சகோதரிகளும் என்கூட நடப்பதற்கு வந்திருந்தார்கள். அத்தோடு மருமகள் ஒருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்தபடியால், அவர்களோடு கதைத்தபடி செல்லுகின்ற பொழுது, கவனம் நடை பாதையிலும் கதைகளிலும் இருக்கும்.
இவ்வருடம் அடிக்கடி தனியே சென்றுவந்தபடியால் ஒருமுறை சைவக்கோவில் அருகில் வந்துகொண்டிருக்கும் பொழுது அக்கோயிலை அண்டி அதனருகே ஒரு பெரிய மரம் இருப்பதை அவதானித்தேன். சற்று நின்று கவனமாக பார்த்த பொழுது அதன் அரைவாசி பகுதி இராணுவ முகாமுக்குள்ளும் அரைவாசி கோவிலை அண்டியும் காட்சியளித்தது.
என்ன மரம் என்று நின்று பார்த்த பொழுது ஆகா அதே எனது அலுப்பாந்தியடி ஆலமரமே அது என்று கண்டுகொண்டேன். எத்தனையோ இராணுவ இயக்க பிரச்சனைகளுக்குள்ளும் இப்பெரிய மரம் அசையாமல் நின்றிருக்கே என்று நினைத்த பொழுது எனது சின்ன வயசு நாடகமும் அதன் முக்கிய விடயமான ‘’ஆலமரம் மட்டும் அசையாமல் நின்றது’’ என்று முடியும் நாடகத்தின் பாடல் நினைவுக்கு வந்தது.
நான் ஊருக்கு சென்று அப்பாவையும் தங்கையையும் நண்பர் உறவினர்களையும் எனது பள்ளிக்கூடத்தையும் பார்த்து வந்த எனக்கு இப்போ எனது பால்ய நட்பின் உறவான அலுப்பாந்தியடி ஆலமரமும் என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஊரின் தாகம் இன்னும் அதிகமாகிறது.