கால்நடைப் பண்ணைகள் ஏன் தோல்வியடைகின்றன…?(பகுதி 1)

அவரின் சமையலை உண்பவர்களின் ஏச்சுகளை ஏளனங்களை தாங்க வேண்டும்.கலவைகளை மாற்றி மாற்றி செய்துதான் சிறந்த கைப்பக்குவத்தை பெற முடியும். ஒரு தச்சு வேலை செய்பவர் அதனை நீண்ட காலம் தொடர்ச்சியாக செய்யும் போதும் ஒரு கடைக்காரர் தன் வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்தும் தவறுகளை திருத்தியும் தன் தொழில்களில் தேர்ச்சி பெறுகின்றனர். அதாவது எந்த தொழிலும் இப்படித்தான். அனுபவமும் பொறுமையும் மிக அவசியம்.இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல ஒரு தொழிலில் உடனடியாக இலாபம் சம்பாதிக்க முடியாது. நான் முன்னுக்கு சொன்னது போல சட்ட விரோத தொழில்களில் தான் உடனடி வருமானம் வரும்.ஆனால் கூடவே சட்டச் சிக்கலும் வரும்.

இவ்வளவு நீட்டி முழங்க ஒரு அறிமுகம் தேவையா என உங்களுக்கு ஐயம் எழலாம்.தேவைதான். அண்மை நாட்களாக என் அவதானிப்பில் கால்நடை வளர்ப்பும் இந்த மாதிரி உடனடி வருமானம், இலாபத்தை நம்பி தொடங்கப்பட்டு தோல்வியடைகின்றன. பெருமளவு பணமும் நேரமும் வீணாகுவதை இந்த துறையில் அதிகம் அவதானிக்க முடிகிறது.
ஏனைய தொழில்களை போன்று கால்நடை வளர்புக்கும் இலாபத்தை நோக்கி நகர குறிப்பிட்ட காலம் எடுக்கும். அனுபவம் தேவை.அத்துடன் ஆரம்பத்தில் அதிக முதலீட்டை போட்டு நீண்ட நாட்களின் பின்தான் இலாபத்தை தொட முடியும்.

அண்மை நாட்களில் யூடியூப் போன்ற தளங்களில் வெற்றிகரமான கால்நடை வளர்ப்பு,மாதத்தில் இரண்டு லட்சம் வருமானம்,கைநிறைய காசு என பல காணொலிகளை காணமுடிகிறது.இவற்றை பார்த்த பலர் தாங்களும் இந்த மாதிரி கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது.அதாவது லட்சக்கணக்கில் உடனடி வருமானத்தைப் பெற.
இதிலும் சிறப்பாக, சிலர் தாங்கள் பார்த்துவரும் நல்ல பணிகளைக்கூட துறந்துவிட்டு ஆடு மாடு கோழி வளர்க்க புறப்பட்டு கையை சுட்டுக் கொள்வதை காண முடிகிறது.

இன்னொரு தரப்பு இயற்கை வேளாண்மை முறையையும் இயற்கையோடு இணைந்த கால்நடை வளர்ப்பையும் செய்யப்போகிறோம் என சூறாவளியாக கிளம்பி விளைச்சலும் இல்லை கால்நடையும் இல்லாமல் உற்பத்தியும் இல்லாமல் நிற்கின்றனர்.ஆண்டாண்டு காலமாக எங்கள் முன்னோர்கள் செய்த கால்நடை வளர்ப்பையும் இயற்கை வேளான் முறைகளையும் எங்களால் செய்ய முடியாதா ? யாரும் இந்த இயற்கை வேளாண்மை கால்நடை வளர்பில் வெற்றியடையவில்லையா? இயற்கை வேளாண்மையை குறை சொல்ல வேண்டாம் என்று நீங்கள் ஆதங்கப் படுவது புரிகிறது.

பொறுமை பொறுமை.பலர் கால்நடை வளர்ப்பில் வெற்றி கண்டுள்ளனர் என்பதும் பலர் தரமான இயற்கை வேளாண்மையை செய்து பலனடகின்றனர் என்பதும் உண்மை. எனினும் சரியான வேளாண் முறைகளை கடைபிடிக்காமல் அரை வேற்க்காட்டுத் தனமாக செயற்பட்டு வெற்றி பெற்றவர்களை விட பல மடங்கில் முயற்சியாளர்கள் தோற்றுப் போகின்றனர் என்பதால் அதற்குரிய காரணங்களையும் முடிந்தவரை தீர்வுகளையும் இந்த தொடர் ஆராய்கிறது.குறிப்பாக கால்நடை வளர்ப்பு தொடர்பாக …… விலாவரியாக ஆராய்வோம்.பண்ணைகளின் தோல்விக் கதைகளை.காரணிகளை. அவற்றை எப்படி செய்திருந்தால் அவை தப்பிப் பிழைத்திருக்கும் என்பதை……

அதாவது நீங்கள் கால்நடை வளர்ப்பில் வெற்றி பெற்றவர்கள் என்றால் இது உங்களுக்கானது இல்லை யார் யார் இவற்றை செய்து கையை சுட்டுக் கொண்டார்களோ அவர்களுக்கானது.புதிதாக ஈடுபட விரும்புவர்களுக்கானது.இந்த தொழிலை சரியாக அவர்கள் செய்ய துணை புரியும்.

புதிதாக தொடங்கப்படும் பல கால்நடை பண்ணைகளை உற்றுப் பாருங்கள்.பாரிய முதலீட்டில் அவை தொடங்கப் படுகின்றன.ஒரு ஐடியல் பண்ணை எப்படி இருக்க வேண்டுமோ சகல விடயங்களும் அந்த பண்ணைகளில் இருக்கும் .ஆனால் அந்த பண்ணைகள் சிறிது காலத்தில் தோல்வியடைகின்றன.ஏன் என்று பார்தால் பல அடிப்படை விடயங்களை அந்த பண்ணையை தொடங்கியவர் தவற விட்டிருப்பார்.

உண்மையில் பண்ணையின் உரிமையாளர் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு தொடர்பான எந்த வித அனுபவமோ அறிவோ கொண்டிருக்க மாட்டார்.வெறும் கேள்வி ஞானம்தான்.இல்லாது போனால் YouTube போன்ற இணைய தளத்தில் வரும் உசுப்பல்களையும் இப்படியான பண்ணை தொடங்குபவரின் பணத்தை சுருட்ட காத்திருக்கும் வட்ஸ்அப் குழுக்களின் மாயாஜாலத்தில் மயங்கியவராகவோ இருப்பார்.
குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் இங்கு பல கால்நடைப் பண்ணைகளை உறவினர்களை மேற்பார்வையாளராக விட்டே தொடங்கியிருப்பர். அந்த உறவினர் வேலைக்கு பலரை நியமித்து பண்ணைகளை பராமரிப்பார்.

குறிப்பாக கனடா,ஐக்கிய ராச்சியம் ,ஜேர்மனி போன்ற வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள மாடுகள் மற்றும் பண்ணைகள் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பார்த்துவிட்டு அப்படியே இங்கும் அந்த பண்ணைகளை இங்கு தொடங்க எத்தனிக்கின்றனர். அல்லது இங்கு உரிமையாளர்கள் தாங்களே நின்று வளர்க்கும் கால்நடைப் பண்ணைகளின் வெற்றியைப் பார்த்து பண்ணைகளை தொடங்குகின்றனர். என்ன வேலையாட்களை வைத்து. பல பண்ணைகளில் வேலையாட்கள் உணர்வு ரீதியாக அணுகாமல் பணத்தை எவ்வளவுக்கு எடுக்க முடியுமோ எடுக்கும் விதமாக செயற்பட்டு பண்ணையை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர்.ஏழெட்டு வருடங்களாக இந்த மாதிரி தொடங்கப்பட்ட பல பண்ணகளின் முடிவுகளை அறிந்தவன் என்ற வகையில் ஆதங்கத்துடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன். சரி…தொடருக்குள் செல்வோம்….