பாரதி நினைவுப் பதிவு 10

சொல்வதைக் கேளுங்கள்.

ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள்
அப்பாவைப் பார்க்கப் புதுவைக்கு வந்தார்கள்.
அவர் அப்போது கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்.
நண்பர்கள் மாடியிலில் பேசிக்கொண்டிருப்பது
அவர் செவிகளுக்கு நன்றாகவே கேட்டது.
அதில் ரெண்டுபேர் ஆங்கிலத்திலும் – அறிவியலிலும்
மிகுந்த நாட்டங்கொண்டவர்கள்.
“ஆனாலும் பாரதிக்குத் தமிழில் மோகம் கொஞ்சம் அதிகம்தான்! அப்படியென்ன தமிழில் என்ன இருக்கிறது? கருத்துகளை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அழகான சொற்கள் தமிழ் மொழியில் ஏது?”
என்றார் ஒருத்தர்.
“அட, அதை விடும் ஓய்! சைன்ஸ் எவ்வளவு உயர்ந்தது? தமிழுக்கும் சைன்ஸுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன? ஆயிரம் சொல்லுங்கள், வெள்ளைக்காரன் பெரிய கெட்டிக்காரன்! எத்தனைப் புதிய மெஷின்கள்! எத்தனைக் கருவிகள்! எத்தனைப் பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறான்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்! “
” ஆமாம். இன்னும் கொஞ்ச நாளைக்குள் பாரும். மேற்கு தேசத்துப் பாஷைகள்தாம் நாடெங்கும் விரிந்து பரவும் . தமிழ் ஒளி மங்கி மறைந்து விடும், பார்த்துகொண்டேயிருங்கள்!”
” ஆமாம் , ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால் விரைவில் மெல்ல அழிந்துதான் போய் விடும்.”
இதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த
என் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று.
அருகிலிருந்த என் காதுபட,
இப்படித் தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார் அவர் :
“ஆம், உண்மைதான். தாயை மதியாத நம் தமிழனின்
அசிரத்தையால் தமிழ் அழியும். கோழைகளே!
பழம்பெருமையோடு திருப்தியடைந்து, உண்பதும்
உறங்குவதுமாகக் காலம் கழிக்கிறீர்களே! என்ன கொடுமை! ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா!
நமது நிலை இத்தனை கீழ்மையடைந்திருக்கிறதே என்று
சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவதும்
எழுதுவதும் கேவலமென்று கருதுகிறார்கள், தெரியாத
ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்!
சேர, சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவன் மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! “
புலம்பித் தள்ளியவர், மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார்.
“தம்பிகளே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி?
மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்!
ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது.
இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள்.
அப்போது தமிழ்மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும்.
தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்…
இதோ கேளுங்கள்! “
என்று கூறியவர் வாய்விட்டுப் பாட ஆரம்பித்தார்.
‘யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் – இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்! எங்கள் தாய்!”
என்றவர்,
“கேளுங்கள், சகோதரரே!
தமிழ்த் தாய் கூறுவதைக் கேளுங்கள்!” என்று கோபமும், ஆத்திரமும், சோகமும் கலந்த குரலில் தானே தமிழ்த்தாய் உருவெடுத்துவந்தாற்போலத் தொடர்ந்து பாடினார் ;
‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் – இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்!’