மினிஆப்போலஸ்யை புரிந்துகொள்ளும் நாம், நிச்சாமத்தை புரிந்துகொள்ளத் தயாரில்லை!

சிரட்டைகள் டே கப் (day cup – plastic cup)புகளாக மாறியுள்ளதே அல்லாமல் மனமாற்றம் குறிப்பிடத்தக்க அளவில் நிகழவில்லை. இந்த மனமாற்றம் புரட்சிகளின் தோற்றுவாயாக விளங்கக்கூடிய பல்கலைக்கழகத்திலேயே நிகழாத போது ஏனைய கட்டமைப்புகளில் அதனைக் காண்பது மிகக் கடினம்.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்கள் தமது முதல் ஆண்டில் காதலில் வீழ்வார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில் சமூகப்பின்னணிகள் தெரிய வர ஆரம்பித்த அக்காதல்கள் முடிவுக்கு வந்துவிடும். இந்த சாதிய பிரதேச மதப் பின்னணிகள் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் ஆய்வுகளுக்கு எடுக்கும் தலைப்புகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவு பதவி உயர்வுகள் ஆகியவற்றிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராவதற்கான மிக முக்கிய தகுதி யாழ் உயர்குல சைவ வேளாளராக இருக்க வேண்டும். அதனைவிட வேறெந்த தகுதியும் முக்கியமாகக் கருதப்படுவதில்லை. வேறு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் யாழ் உயர்குல சைவ வேளாளரல்லாத ஒருவர் யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வரமுடியாது. அவ்வளவிற்கு அங்கு சாதிய பிரதேசவாத மாதவாத வேர்கள் ஆழமாக வேரூன்றியுள்ளது.

அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் கூட சாதி என்று வருகின்ற போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொள்வார்கள். 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது சிங்கள பேரினவாதத்தின் மிக மோசமான செயலே. அதுமிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் ஒடுக்கும் சாதி வெள்ளாளர் யாழில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சனசமூக நிலையங்களை பாடசாலைகளை எரித்துள்ளனர். ஒடுக்கபட்ட சமூகங்களின் மாணவர்களுக்கு, வன்னியில் வாழும் மலையகத் தமிழர்களுக்கு இன்றும் கல்வி எட்டாக் கனியாகவே உள்ளது. மனித உரிமைகள் பற்றி குரல் எழுப்பும் எவரும் இவை பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் திறப்பு விழா நடக்க இருக்கையில், அப்போது யாழ் மேயராக இருந்த செல்லன் கந்தையா அந்நூலகத்தை திறந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆனந்தசங்கரி ஐயா திறப்பை ஒழித்து வைத்த கதை யாவரும் அறிந்ததே. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் யாழ் நூலகத்தை திறந்து வைக்கக்கூடாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் கூட இணைந்து செயற்பட்டனர். வாக்கு வங்கியே இல்லாத தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கூட சாதித் தடிப்பிற்கு எவ்வித குறையும் இருக்கவில்லை.

யாழ் மேயராக இருந்த பொன் சிவபாலன் சரோஜினி யோகேஸ்வரன் போன்றோர் புலிகளால் கொல்லப்பட தமிழர் விடுதலைக் கூட்டணியால் பலிக்கிடையாக மேயராக்கப்பட்டவர் தான் செல்லன் கந்தையன். இதே செல்லன் கந்தையன் மேயராக இருக்கின்ற போதே அவரை தாக்க முற்பட்டவர் அல்லது தாக்கியவர் இப்போது சாதியத்திமிரை நிலைநிறுத்த லண்டனில் இருந்து குதித்து இருக்கிறார் தேர்தலுக்கா. இதே கட்சிக்கு தலைவராக பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவரிடம் பதவியை ஒப்படைக்க மறுத்த தலைவரும் அடிப்பொடிகளும் அவரை ஓரம்கட்டிவிட்டனர். இப்போது ஐயா போக திண்ணை காலியானால் செல்லன் கத்தையா உட்கார்ந்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம். லண்டனில் இருந்து பறந்துபோய் திண்ணையை காப்பாற்ற போகிறாராம் இந்த சாதிமான்.

வன்னியில் இன்று வாழ்பவர்களில் 40 முதல் 60 வீதமானவர்கள் மலையகத் தமிழர்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. ஏ9இன் மேல் இருந்து ஒரு பறவையின் கண்ணூடாக பார்ப்பது போன்று கணித்தால் அங்கு மலையகத் தமிழர்களின் வாழ்விடங்களையும் ஏனைய தமிழர்களின் வாழிவிடங்களையும் அவற்றிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் மிக இலகுவாகக் கண்டுகொள்ள முடியும். பாராளுமன்ற உறுப்பினரான எஸ் சிறீதரன் இந்த மலையகத் தமிழர்களக் கேவலப்படுத்திய ஒலிபரப்பு சில ஆண்டுகளின் முன் இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பாராளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி ஒடுக்கப்பட்ட சாதியினரதும் மலையகத் தமிழரினதும் பிரதிநிதித்துவம் என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வேலைவாய்ப்புகளில் ஒடுக்கபட்ட சமூகங்களுக்கு மத்தியில் பணியாற்றியதில் ஈபிடிபி க்கு முக்கிய பங்கு உண்டு. இக்கட்சி தொடர்ந்தும் தனது வாக்கு வங்கியை வளர்ப்பதில் அதற்கு தடையாக இருப்பது, இக்கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக உயர்சாதி வெள்ளாளரால் கருதப்படுவதும் ஒரு காரணம்.

மினிஆப்போலஸ்யைப் போல் நிச்சாமமும் ஆயிரத்துத்தொளாயிரத்து அறுபதுக்களின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தை உலுக்கியது. இலங்கையில் தமிழர்கள் முதலில் ஆயுதம் தூக்கியது பேரினவாதத்திற்கு எதிராக அல்ல சாதியத்திற்கு எதிராக என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் இன்று கால்நூற்றாண்டுக்குப் பின்னும் மனித உரிமைக் குரல் எழுப்பும் தமிழ் சமூகம் ஒடுக்க்பட்ட மக்களின் கழுதை நெரித்துக் கொண்டிருக்கின்றோம் அச்சமூகம் முச்சுத் திணறுகின்றது என்பதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள மறுத்தே மனித உரிமைக் கோசத்தை எழுப்புகின்றது.