வானவில்….

○ அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளான மேற்கு நாடுகளினதும் மிரட்டல்கள்.

○ இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடான இந்தியாவின் அழுத்தம்.

○ உள்நாட்டில் இனவாத – மதவாத சக்திகளின் தேசிய ஐக்கியத்துக்கு எதிரான நடவடிக்கைகள்.

○ விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பும்.

○கொரோனா நோயின் வேகமான பரவல்.

○ சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை.

○ எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இணைந்து மக்கள் மத்தியில் பரப்பி வரும் பொய்யான செய்திகளும் வதந்திகளும்.

○ ‘அரச சார்பற்ற நிறுவனங்கள்’ என்ற பெயரில் மேற்கத்தைய நாடுகளின் பணபலத்தில் செயல்படும் அமைப்புகளின் நாசகாரச் செயல்கள்.

இப்படி இன்னும் பல சக்திகளின் செயல்பாடுகள்.

இந்த சக்திகள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் பலவிதமான முற்போக்கு விரோத, தேசத்துரோகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன.

Report this ad

குறிப்பாக 1958இல் ஏற்படுத்திய இனவன்செயல், 1959இல் பண்டாரநாயக்கவை கொலை செய்தமை, 1962இல் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி, 1964இல் பத்திரிகை மசோதாவுக்கு எதிராகச் செயற்பட்டு சிறீமாவோவின் அரசைக் கவிழ்த்தமை, 1971இல் ஜே.வி.பி. இயக்கத்தின் மூலம் சிறீமாவோ தலைமையிலான மக்கள் முன்னணி அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சி, 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனவன்செயல்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இந்தச் செயல்கள் எல்லாவற்றையும் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் இணைந்தே அரங்கேற்றியுள்ளன.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உள்நாட்டு இனவாத சக்திகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு சக்திகள் உருவாக்கிய இனவாத யுத்தமே வரலாற்றில் நீண்டகாலம் அதாவது 30 வருடங்கள் நீடித்து நாட்டை நாசமாக்கி சின்னாபின்னப்படுத்தியது. யுத்தத்தை நிறுத்துவதற்கு சமாதான வழிகளிலும், போர் வழியிலும் எடுத்த முயற்சிகள் எல்லாவற்றையும் இந்த சக்திகள் தொடர்ச்சியாகச் சீர்குலைத்து வந்தன.

இந்த நிலைமையில்தான் 2009இல் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் உறுதிமிக்க நடவடிக்கை எடுத்ததின் மூலம் பிரிவினைவாத பாசிச புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

ஆனால் மகிந்த தலைமையிலான அரசு புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்ததை உள்நாட்டிலிருந்த சிங்கள – தமிழ் இனவாத சக்திகளும், அவர்களது மேற்கத்தைய எஜமானர்களும் அறவே விரும்பவில்லை. எனவே இந்த சக்திகள் மீண்டும் கூட்டுச் சேர்ந்து தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு சதி சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு இன்னொரு காரணம், இலங்கையில் இடதுசாரி சக்திகள் பிளவுபட்டும் பலவீனப்பட்டும் போயிருப்பதுதான்.

இலங்கையில் முதல் தோன்றிய அரசியல் கட்சி 1935இல் உருவான இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சிதான். அந்தக் கட்சி தோன்றி வெகுகாலத்துக்குப் பின்னர்தான் இதர கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜே.வி.பி., சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தோற்றம் பெற்றன.

ஆனால் தூரதிஸ்ட்டவசமாக சமசமாஜக் கட்சிக்குள் உருவான ஸ்டாலினிய – ரொட்ஸ்கிய தத்துவார்த்த முரண்பாடு காரணமாக அந்தக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு 1943இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இந்தப் பிளவு ஏற்பட்ட பின்னர் இடதுசாரிக் கட்சிகளின் மக்கள் மீதான அக்கறை தேய்ந்து இரு பகுதியினரும் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதிலேயே காலத்தைக் கழித்தனர்.

அவர்களது மார்க்சியத்துக்கு விரோதமான குறுகிய அரசியல் பார்வை காரணமாகவும், ஒருமுனைவாத செயல்பாடுகள் காரணமாகவும் சமசமாஜக் கட்சிக்குள்ளும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் மேலும் மேலும் பல பிளவுகள் ஏற்பட்டு இன்று இரு அணியினருமே மிகவும் பலவீனப்பட்டுப்போய் உள்ளதுடன், பொதுஜன பெரமுனை அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் தயவில் வாழவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கமாக இருந்த நேரத்தில் இலங்கையின் தொழிலாளி வர்க்கத்துக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுத்த உரிமைகளில் ஒரு வீதத்தைத் தன்னும் இன்று பெற்றுக் கொடுக்கக்கூடிய நிலையில் இடதுசாரி இயக்கம் இல்லாதது தூரதிஸ்ட்டமே.

ஒன்றுபட்ட இயக்கமாக இயக்கமாக இடதுசாரிகள் செய்த சாதனைகளை நாட்டின் தற்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்ஸவே அண்மையில் வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தி சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் மகிந்த ‘கடந்த காலத்தில் இடதுசாரிகள் மேற்கொண்ட போராட்டங்களின் பெறுபேறாகவே மக்கள் இன்று பல உரிமைகளை அனுபவிக்கிறார்கள்’ என வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.

இதன் அர்த்தம் என்னவெனில், இடதுசாரிகள் மீண்டும் ஐக்கியப்பட்டு மக்களுக்காகப் போராட வேண்டும் என்பதாகும். ஆனால் ஒரு முதலாளித்துவ ஆளும் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஒருவருக்கு விளங்கும் இந்த உண்மை பழம்பெரும் இடதுசாரி இயக்கங்களுக்கு இன்னமும் புரியாமல் இருப்பதுதான் கவலையான விடயம்.

பிரதமர் மகிந்தவின் கருத்துக்கு இன்னொரு அரத்தமும் உள்ளது. அதாவது இன்றைய அரசு பெரும்பாலும் தேசிய முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரளவு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்த அரசாக இருந்தாலும், அதனால் தனித்து நின்று நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது என்பதே அது. அதனால் பலம் பொருந்திய இடதுசாரி இயக்கமொன்றின் உதவி இன்றைய அரசுக்குத் தேவைப்படுகின்றது என்பதே அவரது உரையின் இன்னொரு அர்த்தம்.

எனவே, இன்று மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுவது பலம் பொருந்திய ஒரு இடதுசாரி இயக்கத்தின் மீள் எழுச்சியே. உடனடியாக அப்படியான ஒரு நிலையை உருவாக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு விரிவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் குழுக்களும் ஒரு ஐக்கிய முன்னணியாகத் தன்னும் இணைந்து வேலை செய்வது அவசியமாகும்.

இந்த உண்மையை அனைத்து இடதுசாரி சக்திகளும் புரிந்துகொண்டு செயலில் இறங்க வேண்டும்.

வானவில் நூற்றியிருபத்தாறை முழுமையாக வாசிப்பதற்கு:

(பதிவு இறக்கம் செய்ய…)