வில்லங்கமான விளையாட்டு

லசித் மலிங்க உள்ளிட்ட 10 இலங்கை அணி வீரர்கள், பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில், 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியை இலக்கு வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஆறு இலங்கை அணி வீரர்கள் காயங்களுடன் உயிர்த் தப்பினர். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, சர்வதேசக் கிரிக்கெட் அணிகள் தயங்குகின்றன.

பாகிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பற்ற சூழலினால், முன்னணி கிரிக்கெட் அணிகள் எவையும் பாகிஸ்தான் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அண்மையில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு, சர்வதேச அணிகளுடனான போதிய போட்டிகள், பயிற்சிகள் இல்லாமை ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து மூன்று ஒரு நாள் மற்றும், மூன்று டி-20 போட்டிகளில் ஆட இணங்கியிருந்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்த நிலையில் தான், இலங்கை அணி வீரர்கள் பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி, பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகியுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சொயப் அக்தர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகள் இலங்கை அணியைக் கடுமையாகச் சாடுவதாக உள்ளது.

நெருக்கடியான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் உதவியாக இருந்திருக்கிறது என்பதை அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். 1996இல் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், இலங்கையில் நடந்த உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கேற்க அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மறுத்துவிட்ட போது, இந்தியாவுடன் நட்புறவு போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தானே முன்வந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதுபோல, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியே முதலில் தாமாக முன்வந்து இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாதுகாப்புச் சார்ந்த நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்ட போது, பாகிஸ்தான் அணி கைகொடுத்து உதவியது என்பதை நினைவுபடுத்தி, இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுத்தது குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிறார் அக்தர்.

பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கைக்கு பாகிஸ்தான் அளித்துள்ள உதவிகள் எப்போதும் மறந்துவிடக் கூடியதல்ல என்பது நியாயமான கருத்தே.

அண்மையில், கொழும்பில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த அந்த நாட்டின் தேசியதின நிகழ்வில் பங்கேற்ற இலங்கையின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள், அதனை நினைவுபடுத்தியிருந்தனர்.

அதுபோலவே, இலங்கைக்குப் பாதுகாப்பு சார்ந்த எந்த உதவிகளையும் எப்போதும் வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது என்பதை, பாகிஸ்தான் தூதுவரும் வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு விடயங்களில் நெருங்கிய ஒத்துழைப்பு இருந்தாலும், கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு விவகாரம் இரு தரப்பிலும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை அணி வீரர்கள் பலரின் விலகலினால் ஏற்பட்ட அதிர்ச்சியில், பாகிஸ்தான் அமைச்சர், பவாட் ஹுசைன் சௌத்ரி, இந்தியாவின் அச்சுறுத்தலால்தான் பாகிஸ்தானுக்கான பயணத்தை இலங்கை வீரர்கள் புறக்கணித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார்.இது பெரும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்காத போதும், அவரது ஊகத்துக்கு வலுவான ஒரு காரணம் இருப்பது கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றால், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அணி வீரர்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது என்பதே அவர் கூறிய அந்தக் காரணம். எவருமே இந்தக் காரணத்தை சரியாக இருக்கக் கூடுமோ என்ற நோக்கில் தான் பார்ப்பார்கள்.

ஏனென்றால், இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் விளையாட்டுத் திறமையை வளர்ப்பதற்கான நல்ல பயிற்சி வாய்ப்பாகவும் அது இருக்கிறது. பாகிஸ்தான் பயணத்தினால் அந்த வாய்ப்பு பறிபோவதை எந்த வீரர்களும் விரும்பமாட்டார்கள் தான்.

ஆனால், இந்தியா அவ்வாறு அச்சுறுத்தியதா என்பதே இப்போதுள்ள கேள்வி. காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் எவ்வாறு மோதிக் கொள்ளுமோ அதுபோலத்தான் கிரிக்கெட்டிலும். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதுமே கீரியும் பாம்பும் தான்.

இந்தியாவில் அண்மைக்காலமாக பாகிஸ்தானுக்கு எதிரான மனோநிலை வலுப்பெற்றிருக்கின்ற நிலையில், இலங்கை அணி வீரர்களுக்கு இந்தியா அவ்வாறான அழுத்தங்களைக் கொடுத்திருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடும்.

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட்டை விளையாட்டாகவே பார்ப்பதில்லை. அதனை தமக்கிடையிலான கௌரவப் போராகவே பார்த்து வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இருந்து பார்க்கும் எவருக்கும், இந்தியா மீது சந்தேகம் வருவது இயல்பு தான்.

ஆனால், பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டு வெளியானதுமே, இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அவ்வாறான அழுத்தங்கள் எதையும் இந்தியா கொடுக்கவில்லை என்று, அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

ஆனாலும், பாகிஸ்தான் விடுவதாக இல்லை. இலங்கையைப் பயன்படுத்தி, இந்தியாவைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இலங்கை மாட்டிக்கொண்டு முழிப்பது இதுதான் முதல் முறையன்று.

அண்மையில் காஷ்மீர் மாநிலத்தை இந்தியா இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துச் செய்தது பாகிஸ்தானுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து விளக்கமளித்தார் பாகிஸ்தான் தூதுவர். அதற்குப் பின்னர் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை சாடும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் தூதரக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் சார்க் அமைப்புக்கு உயிரூட்டுவதற்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுக்களை நடத்த மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாகவும் செய்தி வெளியிட்டது பாகிஸ்தான்.

இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது,
சார்க் அமைப்புக்கு உயிர் கொடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதிலிருந்து பாகிஸ்தானை ஓரம்கட்டவே பிம்ஸ்ரெக் அமைப்பை இந்தியா பலப்படுத்தி வருகிறது. இதை இலங்கை அரசாங்கம் நன்றாகவே அறியும். காஷ்மீர் விவகாரத்தில் கருத்து வெளியிட்டால் அது இலங்கைக்கு பாதிப்பாக அமையும்- அதனை இந்தியா விரும்பாது என்பதையும், அரசாங்கம் அறியும்

இவ்வாறான நிலையில்? பாகிஸ்தான் தேவையின்றி இலங்கையை சிக்கலுக்குள் இழுத்து விட்டது, உடனடியாகவே அவ்வாறு எந்தக் கருத்தையும் ஜனாதிபதி வெளியிடவில்லை என்று மறுப்பு வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.

இதுபோன்று அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை உருவாக்கும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடுகள் நீடிப்பதும் அதனால் பிராந்திய நாடுகளை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதும் உறுதியாகியிருக்கிறது.

இலங்கையை தன்பக்கம் இழுக்கவே பாகிஸ்தான் முற்படுகிறது. ஆனால் எவ்வளவு தான் முரண்பாடுகள் இருந்தாலும், இந்தியாவின் நிழலில் இருந்து அவ்வளவு இலகுவாக இலங்கையினால் வெளியேற முடியாது. இப்படிப்பட்டதொரு நிலையில், மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இந்தியாவுடன் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுவதிலேயே பாகிஸ்தான் குறியாக .இருக்கிறது.

விளையாட்டாக இருந்தால் என்ன, அல்லது, ஏனைய விவகாரங்களாக இருந்தால் என்ன, பாகிஸ்தானின் இலக்கு இந்தியாவைக் குறிவைப்பதாகவே இருக்கிறது.

இலங்கை அணியின் முடிவுக்கு இந்தியா மறைமுக காரணியாக இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம்.

ஆனால் நேரடியாக இலங்கை அணியை குற்றம்சாட்டாமல் இந்தியா மீது பாய முற்பட்டிருக்கிறது பாகிஸ்தான்.

இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கை கிடைத்திருக்கிறது என்ற பிரதமர் செயலகத்தின் அறிக்கையானது, இந்த விவகாரத்துக்குப் பின்னால் உள்ள உச்சகட்ட பிராந்திய அரசியலை வெளிப்படுத்தியிருக்கிறது.

சாதாரண கிரிக்கெட் விளையாட்டு, அரசியலாகி அது, இப்போது சர்வதேச அரசியலாகவும் மாறியிருக்கிறது.