நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

*
தெற்கில் இருந்தும்
தீகக்கும் எறிகணைகள்
வடக்கில் இருந்தும்
வந்து விழுகிறது

*
வாளேந்திய சிங்கம்
வாய் திறந்து பாயும் புலி
நடுவே மனிதர்கள்
உயிர் தப்ப ஓடுகிறோம்
உயிர் தப்பி ஓடுகிறோம்

*
தப்பி ஓடியவர்களைத்
துரத்திச் சுடுகிறது துப்பாக்கி
சரணடைய வருபவரைச்
சுட்டுக் கொல்கிறது துப்பாக்கி

எப்புறம் ஓடுவேன்
கடவுளே
நான் எப்புறம் ஓடுவேன்

எப்புறம் திரும்பினும் துப்பாக்கி முனைகள்
எப்புறம் திரும்பினும் கொலைஞரின் கரங்கள்

*

பதுங்கு குழியில் படுத்துக் கிடந்தேன்
பச்சை இரத்தத்தில் மிதந்து வந்தேன்

தலை இழந்த பனைகளின் கீழ்
உயிரிழந்த சடலங்கள்

முலை இழந்த தாய்மடியில்
தலை இழந்த குழந்தை

உடல் புணர்ந்து முலை அரிந்து
நிலை குலைந்த பெண் உடல்கள்

கூண்டைவிட்டுப் பறந்தது குருவி
குஞ்சுக்கு இரைதேடி
மீண்டும் வரவில்லை அது
குண்டுக்குப் பலியாகி

*
கழுத்தில் அணிந்த மரணக் குளிசையை
கழற்றி வீசினோம்
வெள்ளைக் கொடியைக் கைகளில் ஏந்தினோம்
எல்லைக் கோட்டைத்
தாண்டிச் சென்றோம்
வெடித்தன துப்பாக்கிகள்
வெள்ளைக் கொடிகள் குருதியில் நனைந்தன

*
சகதியில் கிடந்தது
தலைவனின் சடலம்
தலை பிளந்து விழி திறந்து.
எப்படி நிகழ்ந்தது
யாரும் அறியோம்

முப்பது ஆண்டுக் கொடுங்கனவு
நனைந்து கலைந்தது நந்திக் கடலில்

*
விமானத்திலிருந்து இறங்கிவந்தார்
அசோகரின் புதல்வர்
மண்டியிட்டு நிலத்தை முத்தமிட்டார்
அது அவர் மீட்ட நிலம்
உடல் சிதைந்து
உயிர் இழந்தோரின்
குருதியில் நனைந்த நிலம்
குருதியின் ஈரம் படியவே இல்லை
அவரது விரல்களில்

*
சிங்கத்தின் வால் விறைத்து நிமிர்ந்தது
பற்கள் நீண்டு கூர்வாளாயிற்று
கர்ஜனை வானைப் பிளந்தது
குருதியில் பொங்கிப்
பாற்சோறு படைத்தனர்
வெற்றிக் களிப்பில்
விருந்துண்டு மகிழ்ந்தனர்

*
முப்பது ஆண்டுப் போரின் முடிவில்
முட்கம்பி வேலிக்குள் முடங்கினோம் நாங்கள்
முகம் கவிழ்ந்தோம்
கூனிக்
குறுகிப்
புதைந்தோம்

(முள்ளிவாய்க்காலின் பின்னர் அவ்வப்போது எழுதிய வரிகளின் இறுதித் தொகுப்பு)

(Slm Hanifa)