சுற்றுச் சூழல் தினம்: ஜுன் 05, 2025


ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கிறது. இது சுற்றுச்சூழலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய சர்வதேச நாள் ஆக உணரப்பட வேண்டும்.

இது கொண்டாட்டத்திற்குரிய நாள் இல்லை. மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள்.

சுற்றுச் சூழல் மாசடைவதையும் அது சாரந்து பூமி வெப்பம் அடைவதையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாள்.
பருவம் தப்பிய மழை வெயில் சீரற்ற கால நிலை என்றாக அல்லாடும் உலகிற்கு இது எதனால் ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானபூர்வமாக எடுத்துரைக்கும் நாள்.

அதிகளவு கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதனை உள்வாங்கி பிராண வாயுவை(ஓட்சிசன்) தரவல்ல மரங்களை கட்டுப்பாடற்று அழித்தல் என்பதான விடயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாள்.

துருவங்கள் பனி மலைகள் உருகுவதும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து தரையிற்கு வெள்ளம் புகும் அபாயங்களையும் எடுத்துரைக்கும் நாள்.
உலக சனத்தொகையின் பெருக்கம் அது சார்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்படும் பொருள்களால் ஏற்படும் கரியமில வாயுக்களும் இதன் போது ஏற்படும் கழிவுகள் கடல் நீரிலும் தரையிலும் வழி மண்டலத்திலும் அளவிற்கு அதிகமாக கலப்பதினால் ஏற்படும் மாசுக்களும் என்றாக உலகு சென்று கொண்டிருக்கின்றது.

ஆனால் செயற்கை நுண் அறிவுக் கணிப்பொன்றின் மூலம் 2300 ஆண்டு அளவில் உலக சனத்தொகையின் பெருக்கம் வெகுவாக குறைவடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

ஆனால் இது மனித வாழ்வில் குடும்பமாக வாழுதல் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குதல் என்பதற்கு அப்பால் இந்த சந்ததி உருவாக்கத்தில் புதிய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டாத நிலமைகளினால் ஏற்படப் போகின்றது என்பதே உண்மையாகி வருகின்றது.

இந்த மக்கள் தொகை குறைவிற்கு தொழில் வாய்ப்பு இன்மையால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால், மக்கள் தொகையில் பாரியளவான வீழ்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த தொழில் வாய்ப்புக்குறைவிற்கும் இந்த செயற்கை நுண் அறிவின் வளர்ச்சிதான் முக்கிய காரணியாகவும் இருக்கப் போகின்றது என்பது இங்கு ஒரு ‘முரண் நகைதான்’.

இதன் அர்த்தம் சுற்றுச சூழல் மாசடைதல் சனத்தொகைப் பெருக்கத்தால் என்ற என்ற விழிப்புணர்வின் அடிப்படையில் மனிதர்களிடம் ஏற்படவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த பூமிப்பந்து மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.

மாறாக அது விலங்குகளுக்கும் ஏனய உயரினங்களுக்கும் தாவரங்களுக்கும் உரிமையை உடையது. இங்கு உள்ள வாழ்க்கைச் சுழற்சி முறையை கருத்தில் கொள்ளாது வாழும் மனிதனின் செயற்பாடுகள் இங்கு கேள்விகளாகி நிற்கின்றன.

நெகிழியின் அறிமுகப்படுத்தல் இந்த சுற்றுச சூழல் மாசு அடைதலுக்கான ஒரு முக்கிய காரணமாகியும்விட்டது என்பது இங்கு கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

இதனை முழுமையாக இல்லாது ஓழிப்பது என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என்றாலும் உலகின் பல நாடுகளும் இதற்காக அற்பணிப்புடன் போராடி வருகின்றன.

இதில் இலங்கையும் முன்னிலையில் உள்ளது. இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது

உணவு பரிமாற வாழையின் பாகங்களைப்(இலை மடல் என்றாக) பாவிக்கும் முறையின் மீள் உள்வாங்கல் இதன் ஒரு வடிவம்தான். நாம் இதனை இலங்கையில் செயற்படுத்தியாக வேண்டும்.

ஒருதரம் பாவித்தல்(One time Usage), மீள் சுழற்சி(Recycle) என்பதற்கிடையே நடைபெறும் கருத்தாடல்களை மீள் பாவனையை(Re Usage) பின் தள்ளி உள்ளது. இதற்குள் ஒரு வணிக அரசியல் உண்டு.
அது நுகர்வுக் கலாச்சாரத்தின் வணிக சிந்தனை மீள் பானையை அதிகம் விரும்பாது.

மீள் சுழற்சி என்பதை மீள பாவனைக்கு முன்னால் நிறுத்தினால்தான் பொருட்கள் மீண்டும்… மீண்டும்.. வாங்குவாரர்கள் இதனால் வணிகம் நடைபெறும் என்ற இலாப நோக்கம் உள்ள சிந்தனை இங்கு பின் தள்ளப்பட வேண்டும்.

சருவங்களும், செம்புகளும், உலோக அண்டாக்களும் மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்’, ‘வளர இடம் கொடுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாக பல விடயங்களை புதிய இலங்கை அரசும் செயற்படுத்தி வருகின்றது.
இதனை இலங்கை சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச் சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.

தற்போதைய விஞ்ஞானக் கணிப்புகளின் படி உயிரினங்கள் எடுத்துக்கொள்ளும் ஒட்சிசனுக்கு ஈடுசெய்து நாம் வெளிவிடும் கார்பன வாயு அளவை சம நிலையில் வைத்திருக்கு நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான 260 இறாத்தல் அளவு ஒட்சிசனை உற்பத்தி செய்கின்றது.

இதில் விசேடமாக வேப்ப மரம் 55°F முதல் 100°F வரை வெப்பநிலையை தாங்கும். வெறும் 12 அடி மரம் 3 (AC) ஏர் கண்டிஸனருக்கு சமமான குளிர்ச்சியானது உருவாக்குகிறது.

இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ளவாங்கப்பட்டாலும் எம் தேசத்தவர்களால் அதிகம் உணரப்படாமலும் தறிகப்படும் வேப்பமரக் கொலைகளாக மாறியும் உள்ளன.

மரங்களே உயிர். மரம் ஒரு மதிப்புமிக்க மூலதனம். ஒரு தாவரம் உயிர்களைக் காப்பாற்றும். உங்களுடன் இருக்கும் ஏனைய விலங்குகளின் வாழ்க்கையை எளிதாக்குங்கள்.

அது குரங்கு மயில் யானை என்றாக எமக்கு சில சிரமங்களை ஏற்படுத்துபவையாக இருந்தாலும்….?

எம் தேசத்தில் நாம் அதிகம் பாவிக்கும் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனகள் ஆளுக்கு என்றான சிந்தையிற்குள் வந்துவிட்டன.

இதற்கு மாறாக பொதுப் போக்குவரத்தில் வாகனத்தில் 100 பேர் வரை பயணக்கலாம் இதன் மூலம் கிட்டத்தட்ட அதிகமான பாவிக்கப்படும் 99 வாகனங்களின் கரியமில் வாயுக்களின் வெளியேற்த்தை தடுக்க முடியும்.

கூடவே இதற்கான செலவினங்களையும் நாம் குறைத்துக் கொள்ள முடியும் அது வாகனத்தை வாங்குதல் பராமரித்தல் எரிபொருளை நிரப்புதல் என்பதாகவும்.

சுற்றுச் சுழல் மாசுபடுவதை குறைத்தல் என்பதற்குள் ஒரு மகிழ்வான எளிமையான வாழ்வும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டியை அதிகம் பாவித்தல் என்பது எமது உடல் ஆரோக்கியத்தையும் அதிகம் பேணுவதற்கான ஊக்குவிப்பையும் உருவாக்கும்.

இதற்கான விழிப்புணர்வுகள் பாடசாலை மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எல்லோருக்கும் பொதுவான நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடை வீதிகளில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தை புறந்தள்ளி விட முடியாது.

இதற்கு நல்ல உதாரணம் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர். சில தசாப்தங்களுக்கு முன்னால் நாமாக மொண்டு குடித்த குடி நீர் இன்று நியாய விலைகளுக்கு அப்பால…?; விற்கப்படும் பண்டம் ஆக்கப்பட்டும்விட்டது.

மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது.

எமது முத்தோர் எம்மிடம் பக்குவாமாக ஒப்படைத்த இந்த பூமித்தாயை நாம் அடுத்த சந்ததியிடம் பக்குவமாக ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்புள்ளவராக இருக்கின்றோம் என்பது இவ்வருட சுற்றுச் சுழல் பிரகடனமாக நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்வோம்.