வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

‘வட்டை’ என்பது வயலைக் குறிக்கும். வன்னிப்பிரதேசத்திலே ‘கமம்’, ‘புலம்’ என்று வழங்குவர். மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வயலைக் குறிப்பதற்கு ‘வட்டை’ என்ற சொல் வழக்கிலுள்ளது. 

‘வட்டை’ என்ற சொல் ‘வட்டம்’ என்பதிலிருந்தே வந்திருக்கவேண்டும். காட்டை வெட்டிக் கழனியாக்கும் – வயலாக்கும் செய்கையின்போது காட்டை வெட்டுவதற்கு எல்லையிடுதலைக் ‘காடுவளைதல்’ என்றே கூறுவர். இங்கே வளைதல் என்பது வட்டவடிவமாகச் சுற்றிவருதல் என வரும். ஆரம்பத்தில் வயல்கள் வட்டவடிவில் தான் அமைந்திருந்தன. பயிர்ச்செய்கைக் காலத்தில் வயலைச் சுற்றிவந்து காவல் செய்வதை’வட்டை வளைதல்’ என்றே கூறுவர். வட்டத்தில் வளைவு இருப்பதால் ‘வளைதல்’, ‘வளைத்தல்’ என வந்திருக்க வேண்டும். அதாவது’வளைதல்’ – ‘வளைத்தல்’ என்றால் வட்டமாகச் சுற்றிவருதல் – வளைவாக வருதல் என்பதாகும். ஊரில் ‘வளைச்சு வா’ என்றால் ‘சுற்றி வா’ என்று அர்த்தம்.  

மேலும் ‘வெளி’யைக் குறிக்கும் ‘வெட்டை’ என்ற சொல்லின் திரிபாக’வட்டை’யைக் கொள்வாருமுளர். 

கிராமங்களிலே நவீன கழிப்பறை – மலசலகூட வசதிகள் புழக்கத்திற்கு வர முன்னர் ஆட்கள் அனேகமாக ஆண்கள் சனநடமாட்டங்களில்லாத அல்லது சனநடமாட்டங்கள் மிகவும் அருகிக் காணப்படுகின்ற ‘வெளி’ – ‘வெட்டை’ யில்தான் தமது இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்வார்கள். அதனை ‘வெட்டைக்குப் போதல்’ என்று கூறும் வழக்கமுமிருந்தது. ‘வெளி’ யைக் குறிக்கும் இந்த ‘வெட்டை’ திரிந்துதான் ‘வட்டை’ யாகி காலவரையில் வயல்வெளியை – வயல்பரப்பைக் குறிப்பதற்கும் பாவனையாகித் தற்காலத்தில் மட்டக்களப்பு மாநிலத்தில் வயலைக் குறிப்பதற்கு ‘வட்டை’ என்ற சொல் வழக்கில் வந்துவிட்டதுபோலும். 

வயல் பிரதேசங்களிலே எழும் நீர்பாசனப் பிரச்சினைகள் – எல்லைப் பிரச்சினைகள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளைக் கையாண்டு அவற்றைச் சம்மந்தப்பட்ட ஏனைய விவசாயிகளுடனும் அரச அதிகாரிகளுடனும் தொடர்பாடித் தீர்த்துவைப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் அதிகாரம் படைத்தாராக விவசாயிகள் தங்களுக்குள்ளே ஒருவரை நியமித்துச் செயற்படுவர். அவரை ‘வட்டவிதான’ (வட்டைவிதானை) என்றே அழைப்பர். ‘வட்டயர்’ (வட்டையர்) எனவும் அழைக்கப்படுவர். 

கார்கால மழைக் குளிருக்குத் தனது காதலனின் வெதுவெதுப்பான அணைப்பை எதிர்பார்த்திருக்கும் கன்னியொருத்தியின் ஏக்கத்தை எடுத்துக்கூறும். 

இந்த மழைக்கும் இனிவாற கூதலுக்கும் – என்

சொந்தப் புருசனெண்டா சுணங்குவாரா வட்டையில’ 

நாட்டுப்பாடலிலே வயலைக் குறித்தே’வட்டை’ (வட்டையில) வருகிறது. 

கவிஞர் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தில் வரும், 

ஊருக்குள் மேட்டுவட்டை

உழுது கொண் டிருந்தபோது

ஆருக்குச் சோற்றுப்பொட்டி

அடியன்னம் என்று கேட்க….‘ 

என்றுவரும் கவிதை வரிகளிலே மேட்டு ‘வட்டை’ மேட்டுவயல் என்பதாகும். பரந்த வயல் வெளியைக் குறிக்கப் ‘போட்டா’ என்ற சொல்லுண்டு. ‘போட்டா’ என்பதன் பொருள் பெருவரவை என்பதாகும். பரந்தவெளியையும் ‘போட்டா’ என அழைப்பதுண்டு. பரந்தவெளியிலே அமைந்துள்ள குறிப்பிட்ட வயல் பிரதேசமொன்றினைப்’ போட்டா வெளிக்கண்டம்’ என்று அழைக்கும் இடப்பெயர்கள் திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவில் இருக்கின்றன. 

போட்டா வரம்பால புறா நடந்து போறது போல்‘ 

என்ற நாட்டுப்பாடல் வரிகளிலே’போட்டா’ பரந்த வயல் வெளியைக் குறிக்கிறது. 

கணத்தைதான் கனத்தை ஆகியதோ?

‘கணத்தை’ (கணத்த) என்ற சொல்லைக் கவனிப்போம். சேனைப்பயிர்ச் செய்கைக்கென காட்டைவெட்டிக் காய்ந்தபின் எரித்து அந்த நிலத்திலே பயிர் விதைப்பர். சேனைப்பயிர்ச் செய்கை மழையை நம்பியே செய்யப்படுவதால் இப்பயிர்ச்செய்கையின் காலம் செப்டம்பரிலிருந்து அடுத்த வருடம் மார்ச் வரையிலானதாகும். அதாவது வடகீழ்பருவப்பெயரச்சிக் (North East Monsoon) காற்றுக்காலம். சேனைப்பயிர்செய்கை அறுவடை முடிந்த அந்த நிலம் அடுத்ததடவை பயிர்செய்யப்படும்வரை சும்மா விடப்படும். இப்படி சும்மா விடப்படும் காலத்தில் அந்த நிலத்தில் பற்றைக்காடுகள் எழும்பிவிடும். ஆங்கிலத்தில் இதனைச் ‘Secondry Growth Jungle’ என்பர். இதனையே மட்டக்களப்பு மாநிலத்தில்’கணத்தை’ (கணத்த) என அழைப்பர். கணத்தை என்பது சிறுபற்றைக்காட்டை குறிக்கும். சிங்களத்தில் இடுகாட்டை – மயானத்தைக் குறிப்பதற்கான ‘கணத்த’ எனும் வார்த்தையின் வேர்’கணத்தை’ என்ற தமிழ்ச் சொல்லாகவும் இருக்கலாம். இடுகாட்டில் – மயானத்தில் பற்றைகள் வளர்ந்திருக்கும்தானே. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் ஓரிடத்தில் சம்மாந்துறை ஊரிலிருந்து சென்றவர்கள்; சேனைப்பயிர் செய்துவிட்டு, அதனை விட்டுச் சென்றுவிட்டனர். அந்த இடத்தில் பற்றைக்காடுகள் முளைத்துவிட்டன. அந்த இடம் இப்போதும் ‘சம்மாந்துறையாண்ட கணத்த’ என அழைக்கப்படுகின்றது. 

‘மறுகா’ என்பதும் மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்களில் ஒன்றாகும். ‘மறுகால்’ எனவும் வழங்கும். ‘மறுகா’ என்பதன் அர்த்தம் திரும்பவும் – மீளவும் – மீண்டும் – பிறகும் ஆகும். இலங்கையின் வடபுலத்திலே ‘பேந்து’ என வழங்குவர். 

மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்கும் ‘மறுகா’ எனும் இச் சொல் மட்டக்களப்பின் குறியீடாகவும் கொள்ளப்படுகின்றது. த.மலர்செல்வன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சிற்றிதழின் பெயர் ‘மறுகா’ என்பதாகும். மட்டக்களப்பிலிருந்து வெளிவருவதைக் குறிப்பதற்கு ‘மறுகா’ எனப் பெயர் சூட்டினார் போலும். 

கவிஞர் நீலவணனின் வேளான்மைக் காவியத்தின் 

அன்னம்மா அழகிதான்;;;;; இங்

கார்வந்து முடிப்பான் பார்ப்போம்! 

பொன்னம்மா, மறுகால் …. கொண்ணன் 

பொடியனைக் கேட்டுக்கிட்டு….’  என்று கந்தப்போடி கறுவும் பகுதியிலே ‘மறுகால்’ எனும் சொல் இக்காவியத்திற்கு மண்வாசனை அளிக்கிறது. 

‘மறுகா வா!’ என்றால் போய்த் திரும்பவும் – மீண்டும் – மீளவும் – பிறகு வா என்ற அர்த்தமாகும். வடபுலத்தில்’பேந்து வா!’ என்பதைப் போல. ‘மறுகா என்ற சொல்லிலிருந்தே ‘மறுகுதல்’ எனும் வினைச்சொல் விளைகிறது. மறுகுதல் என்பது திரும்பத்திரும்பவருதல் அல்லது சுற்றிச்சுற்றி வருதலைக் குறிக்கும். 

செங்கதிரோனின் ‘விளச்சல்’ காவியத்திலே வரும் கதாநாயகி பாத்திரமான அன்னம் தன் அத்தான் செல்வன் முன்பு தன்னைச் சுற்றி சுற்றி வந்ததை நினைவூட்டும் போது,  

‘மாலைக்குள் மறைப்பில் நின்று  

மறுகுவாய் ஒழுங்கைக்குள்ளே….’ என்கிறாள். 

அடுத்து வருவது ‘கணகாட்டு’ எனும் சொல். ‘கணகாட்டு’ என்பது தொல்லையைக் குறிக்கும். 

‘என்ன கணகாட்டு இது!’ என்று பாட்டிமார் அலுத்துக்கொள்வர். என்ன தொல்லையிது என்பதுதான் அர்த்தம். 

‘சும்மா கணகாட்டுப்படுத்தாம இரு’ என்பார்கள். தொல்லைப்படுத்தாம இரு என்பதே பொருள். 

சிங்களத்திலே ‘கணகாட்டுவ’ என்றால் தமிழில் சண்டை- சச்சரவு எனப்பொருள் தரும்.; சண்டை- சச்சரவு கூட ஒரு தொல்லைதானே. 

தமிழிலிருந்து சிங்களத்திற்குச் சென்ற ஏராளமான சொற்களுள் இந்தக் ‘கணகாட்டு’ம் ஒன்று.  

‘பொருப்பத்தல்’ என்ற சொல் மட்டக்களப்பு மாநிலத்திற்கே உரியதொன்றாகும். ‘பொருப்பத்தல்’ என்பது பொருட்படுத்தல் – கவனமாகக்கொள்ளுதல் எனப் பொருள்தரும். 

கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்திலே, பொன்னம்மா கணவன் கந்தப்போடியிடம், 

‘கறுப்பன் சீனட்டி நெல், நம் 

  கையினால் வடித்த எண்ணெய்

  கருப்பட்டி, உழுந்து, முட்டை 

  கடையிலே மஞ்சள் மட்டும் 

பொருப்பத்தி‘ வாங்கி வைத்தேன்…. என்கிறார். 

‘விளைச்சல்’ காவியத்திலே, கலியாணப் பேச்சுவார்த்தையின் போது கதாநாயகி அன்னத்தின் தந்தை அழகிப்போடி, மாப்பிள்ளை செல்லனின் தந்தை கந்தப்போடி 

(மனைவி பொன்னம்மாவின் தமையன்)யிடம் கூறுகிறார், 

விருப்பத்தைச் சொல்லு மச்சான்!

 வேண்டியதெல்லாம் கேளு!

மருக்கொழுந்தல்லோ அன்னம்

 மடிக்குள்ளே வைத்து நாங்கள்

பொருப்பத்தி வளர்த்த பெட்டை

பொல்லாப்பு வேணாம் பின்னர்’ என்று. 

‘பொருப்பத்தி’ வாங்கி வைத்தேன் என்பது பொருட்படுத்தி- கவனமாக வாங்கி வைத்தேன் என்றும் , ‘பொருப்பத்தி’ வளர்த்த பெட்டை என்பது பொருட்படுத்தி- கவனமாக வளர்த்த பெட்டை என்றும் அர்த்தம் அளிக்கின்றன.  Share