அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றாக தயாரித்து சமர்ப்பிக்க முடியும்!

– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவி நம்பிக்கை
தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்று வருகின்ற சந்திப்புகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியன கொடுக்கின்றன என்று தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது குறித்து தமிழ் – முஸ்லிம் தலைவர்களுக்கு இடையில் கொழும்பில் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று உள்ளன. மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும், ஒரு தமிழ் பெரும்பான்மை சபையையும் உருவாக்க அடிப்படையில் இணங்கி உள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் – தமிழ் தலைவர்களின் இந்த அணுகுமுறை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே ஜான்சிராணி சலீம் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். ஜான்சிராணி சலீம் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-
தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உண்மையில் பேசி தீர்க்க கூடியவை ஆகும். ஆனால் இரு தரப்பினரும் பேச தவறியதன் மூலமாகவே இவை தீராத பிரச்சினைகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளன. எமது தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசி தீர்க்க வாருங்கள் என்று தமிழ் தலைவர்களுக்கு நீண்ட காலமாக பகிரங்க அழைப்புகள் விடுத்து வந்திருக்கின்ற நிலையில் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்து உள்ளது.

கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள், அதில் எட்டப்பட்டு உள்ள இணக்கப்பாடுகள் ஆகியன எதிர்காலத்தில் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிற நம்பிக்கையும், விசுவாசமும் ஏற்பட்டு உள்ளது.

அரசியல் அமைப்பு இந்நாட்டின் அதியுயர் சட்டம் ஆகும். நாட்டில் உள்ள அனைத்து சட்டங்களுக்கும் இதுவே அடிப்படை சட்டமும் ஆகும். எனவேதான் இதில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதன் மூலமாக தமிழ் பேசும் மக்களின் இருப்பு, பாதுகாப்பு, அடையாளம், தனித்துவம், கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த முடியும். மேலும் அரசியல் அமைப்புக்கு மாறாக எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ் பேசும் சமூகங்கள் பெற்று கொள்ளவே முடியாது. அரசியல் அமைப்பு திருத்துகின்ற முன்னெடுப்புகள், முயற்சிகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில் இது தொடர்பாகவும் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

இருவரும் கூடி கலந்தாலோசித்து அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான உத்தேச யோசனைகளை ஒன்றாக தயாரித்து ஒரே குரலில் அரசாங்கத்துக்கு சமர்க்க வேண்டும். எந்த அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை தங்க தாம்பாளத்தில் வைத்து தர போவதே இல்லை, ஆனால் தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக யோசனைகளை தயாரித்து அரசாங்கத்துக்கு ஒரே குரலில் சமர்க்கின்றபோது எமது கோரிக்கை அரசாங்கம் நிராகரிக்க முடியாதபடி வலிமை பெற்று விடுகின்றது. அத்தருணத்தில் சர்வதேச சமூகமும் தமிழ் பேசும் சமூகத்துக்கு ஆதரவான அழுத்த குழுக்களாக செயற்படும் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

எனவே அடுத்த அடுத்த தருணங்களில் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் பரந்த அளவில், விரிந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதே எமது விருப்பமும், பிரார்த்தனையும் ஆகும். இதுவே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் விருப்பமாகவும், பிரார்த்தனையாகவும் இருக்க முடியும்.