இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை

புதிய பிரதமரின் நியமனம் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அடிபணிந்து சிறிது காலம் மௌனம் காத்த போதிலும் சமயத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள பிரஜை என்ற ரீதியில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தன்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேராயர் தெரிவித்தார்.

பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து நாட்டின் எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.  

அதன்பின்னர், மக்கள் எதிர்பார்க்கும்அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கலாம் என்று கூறிய பேராயர், தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவிகள் குழு மூலம் நிபுணத்துவ ஆலோசனை பெற்று, தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.  

நாட்டில் நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் பேராயர் தெரிவித்தார்.