இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 09 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,525 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 06 பேரும் 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவரும் மரணித்துள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள 200 மாணவர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் தொகையைக் கொண்ட 74 பாடசாலைகளை, நாளைமறுதினம் (21) ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதற்கமைய, 53 தமிழ் பாடசாலைகளையும் 21 சிங்கள பாடசாலைகளையும் இவ்வாறு திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அன்றைய தினம் கடமைகளுக்கு சமூகம் அளிப்பர் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் ஒன்றரை வருடத்துக்கு அதிக காலம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த நிலையில், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள்ளை வெற்றிகரமாக முன்னெடுக்க  தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆசிரியர் மற்றும் அதிபர்களிடம் தான் கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.