இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டுக்குள் பரவுகின்ற புதிய வகையான கொரோனா வைரஸ், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளது. அவ்வாறான தொற்றுக்கு உள்ளானவர்கள், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன், கல்கிஸையில் 30 பேரும் தெஹிவளையில் 27 பேரும், பம்பலப்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலே​யே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதால்,  குறிப்பிட்ட ஆடைத்தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். இது பரவலடையும் சந்தர்ப்பத்தில் பாரிய கொத்தணியாக உருவாகுவதற்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி-போகம்பர  சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின் போதே, 104 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 536 கைதிகளுக்கும் விரைவாக பி.சி.ஆர் அறிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக போகம்பர சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நாளை 21ஆம் திகதி இரவு 11:59 மணிமுதல், மே மாதம் 31ஆம் திகதி இரவு 11:59 மணிவரையிலும் இத்​தடை அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் எந்தவொரு விமானப் பயணியும் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி  கிடைக்காது

இது தொடர்பிலான அறிவிப்பை, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ, நேற்று (19) விடுத்தார். “எனினும், மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள், நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானப் பயணிகளுக்கு எவ்விதமான தடையும் இல்லை” என்றார்.

சீனாவினால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் மேலும் மேலும் 500,000 தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள் அடுத்தவாரம் இலங்கைக்கு வருமென சுகாதார இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் ஜயசுமன்ன தெரிவித்தார்.