இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நாட்டில்   நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 160, இரத்தினபுரியில் 75 பேரும், கண்டியில் 49 பேரும், குருநாகலில் 29 பேரும், களுத்துறையில் 25 பேரும், பதுளையில் 38 பேரும், மாத்தளையில் 14 பேரும்,  காலி மாவட்டத்தில் 12 பேரும், கிளிநொச்சியில் 10 பேரும், அநுராதபுரத்தில் 08 பேரும், மாத்தறையில் 06 பேரும் ஏனைய மாவட்டங்களில் தலா 4,3, 2 என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பு உபகரண தொகுதி, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜாவிடம், நேற்று  (18) கையளிக்கப்பட்டுள்ளன. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஊடாக, இந்த உபகரணத் தொகுதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணத் தொகுதிகள், நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட நல்லாயன் மகளிர் கல்லூரிக்கும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் இல்லத்துக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.

நோய்த் தொற்று நீக்கிகளும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளுமே, இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கொவிட் தொற்று ஏற்படாது என்று கூறிவிட முடியாதென தெரிவித்துள்ள பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, தடுப்பூசி ஏற்றி 3 வாரங்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலி, கேகாலை ஆகிய பகுதிகளில் இவர்கள் பதிவாகியுள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, பதில் சுகாதார அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.