இலங்கை: கொரனா செய்திகள்

சுகாதார அமைச்சின் தொற்றுப் பரவல் பிரிவின் ஆலோசனைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தலுக்கான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் முதற்கட்டமாக அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வார காலப்பகுதியில் ஃபைசர் மற்றும் மொடேர்னா வக்சீன்கள் இலங்கைக்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 6.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவு (சன்ஹிந்தசெவன தொடர்மனை தவிர்ந்த பிரதேசம்) முடக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொளை 100 தோட்டம் கிராம சேவகர் பிரிவு போன்றன மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது  கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.

அத்துடன், ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் களுதமட பிரிவு, ஹப்புகஸ்தலாவ கிராமசேவகர் பிரிவு, வீரபுர கிராமசேவகர் பிரிவு,  பஹால கொரகா ஓயா கிராமசேவகர் பிரிவு மற்றும் பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேவகர் பிரிவின் பொல்ஹேன வீதி, லேக் வியு வீதி மற்றும் முதலீட்டு சபை வீதி தவிர்ந்த சகல பகுதிகள் ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் மீகாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாபேவத்த கிராம சேவகர் பிரிவின் உபுல் வசந்த வீதி, ஆரியதாச விதானகே வீதி, ஆரியதாச விதானகே வீதி முடிவு, தேவால வீதி, சியம்பலாபேவத்த கட்டுபெத்த வீதி தவிர்த்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக இன்றும், நாளையும் (29,30) மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று (28)  மேற்கொள்ளப்பட்டன.

இதில் மற்றுமொரு ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஓரிரு தினங்களில் பி.சி.ஆர் அறிக்கைகள் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் தபாலக ஊழியர்கள் அவசியமான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதாக  தெரிவித்தனர்.

கொவிட்- 19 தொற்று பரவலை அடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப், இன்று  (29) தெரிவித்தார்.

அசாதாரண சூழ்நிலையில் பொது மக்களுக்கான சேவைகளை பாதுகாப்பான முறையில் அவர்களின் காலடிக்கு கொண்டு சேர்க்கும் பணியை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களும் உத்தியோகத்தர்களின் வரவுகள் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும் அவர்களுக்குரிய சேவைகளை அசௌகரியம் இன்றி பெற்றுக் கொடுக்கும் நோக்கோடும் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை பொது மக்கள் அத்தியவசிய தேவைகளுக்காக மட்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.