இலங்கை: கொரனா செய்திகள்

கடந்த ஓகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் இடம்பெற்ற கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இன்று(03) மீண்டும் கூடிய கொரோனா தடுப்பு செயலணி, எதிர்வரும் 13 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பணியில் இருக்கும் போது ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தால், அவரின் பதவிக்காலம் முடியும் வரை முழு சம்பளத்தையும் அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்குவதற்காக,  அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளுடன் காணொளி ஊடாக மேற்கொண்டு சந்திப்பில் இந்த விடயங்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் கொரோனா தொற்றால் இதுவரை, 388பேர் உயிரிழந்துள்ளதாக , ஊவா மாகாண சுகாதார  சேவை  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். இதற்கமைய, பதுளை மாவட்டத்தில் 290 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 98 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பதுளையில் 20,106 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மொனராகலையில் 14,055 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

பொதுமக்கள் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்தல் இன்றியமையாது எனத் தெரிவித்த திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள, “மக்களில் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆபத்தை நோக்கிப் பயணிக்க ஏதுவாக அமையும்” என்றார்.

எனவே, தற்போதைய அபாயகர நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுமாறும் அவர்  வேண்டிக்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், “மாவட்டத்தில் உள்ள கிராமியக் குழுக்களை மேலும் வலுப்படுத்தி, வைரஸ் பரவாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இக்குழுவை வலுப்படுத்துவதன் மூலம், கிராமங்களில் வைரஸ் பரவாமல் மக்களை பாதுகாக்க முடியும்.

இக்காலப் பகுதியில் மக்கள் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படல் வேண்டும். உரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய தரப்பினரை ஒன்றினைத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். 

வவுனியாவில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில, நேற்றிரவு (02) வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம் மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த 161 தொற்றாளர்களும் அடையாளம் காணாப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3,328 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.