இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

போராட்டக்காரர்கள் கோஷம் அனைத்திலும் ராஜபக்சே என்ற பெயர் ஒலித்தது. மக்களுக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏன் இவ்வளவு கோபம் என்பதை அறிய நாம் நிச்சயமாக ராஜபக்சே குடும்பத்தினர் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக தெரிந்துகொள்ள வேண்டும்.

7 பில்லியன் டாலர் கடனும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும்.. – வயது 76. இவர் இப்போது இலங்கையின் பிரதமர். 2004-ம் ஆண்டிலும் பிரதமராக இருந்திருக்கிறார். 2005 முதல் 2015 வரை இலங்கையில் அதிபராக இருந்தார். 2009 மே தொடங்கி இலங்கையில் போர் நடந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அந்தப் போரில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் உள்ளன. மகிந்த ராஜபக்சேவுக்கு சிங்கள பெளத்த ஆதரவு இருந்தது.

அதைக் கொண்டே அவர் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் சீனாவிடமிருந்து இலங்கை 7 பில்லியன் டாலர் கடன் பெற்றது. இலங்கையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடன் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் பெரும்பாலான தொகை ஊழலில் ஏப்பம் விடப்பட்டது என்பதுதான் இவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு.

‘தி டெர்மினேட்டர்’ அதிபர் கோத்தப ராஜபக்சே.. – ‘தி டெர்மினேட்டர்’ – இதுதான் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடும்பத்தினரே வைத்த பட்டப்பெயர். இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது மனித உரிமை மீறல் புகாரில் முக்கியமாக சிக்கிய பெயர் கோத்தபய. போர் உக்கிரமாக இருந்தபோது தமிழர்கள் வாழும் பகுதிக்கு வெள்ளை நிற வேன் வந்தாலே மக்கள் ஓடி ஒழிந்து கொள்வார்களாம். காரணம் அந்த வேனில் ஏற்றப்பட்டவர்கள் யாருமே திரும்பவில்லை. யாருடைய விவரமும் இதுவரை இல்லை. அங்குள்ள தமிழர்கள் இன்னும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். போரின்போது ராணுவ அமைச்சகத்தின் செயலராக கோத்தபய இருந்தார். அவர் உத்தரவில் தான் வெள்ளை வேன்கள் இயக்கப்பட்டன என்பது பரவலான புகார்.

இலங்கை பொருளாதார பெரும்பாலும் சுற்றுலாவை சார்ந்தது. ஆனால், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பாலும், அதன் பின்னர் வந்த கரோனா பெருந்தொற்றாலும் அங்கு சுற்றுலா பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் அதைவிடவும் முக்கியமானது, பட்ஜெட்டுகளை மிக்கப்பெரிய பற்றாக்குறைகளுடன் நிறைவேற்றிய அதிபரின் திறமையின்மையும் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் யார் பேச்சையும் கேட்காமல் பல்வேறு வரிவிதிப்பிலும் சலுகை வழங்கியதும் இன்றைய நிலவரத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இவரது முன் கோபத்தால் நிகழ்ந்த இழப்புகளும் பெரியது எனக் கூறுகின்றனர்.

10% கமிஷன் கோரும் பசில் ராஜபக்சே… இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே. இவருக்கு வயது 70, இவருக்கு Mr Ten Percent என்றுதான் எதிர்க்கட்சிகள் பெயர் வைத்துள்ளன. காரணம் அரசாங்க ஒப்பந்தங்களை வழங்க 10% கமிஷன் வாங்காமல் கையெழுத்தே போடமாட்டாராம்.

இலங்கையின் மாகாண அரசுகளை சுரண்டி இவர் நிறைய பணத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால், இவர் மீதான அத்தனை வழக்குகளும் கோத்தபய அதிபரானதும் தள்ளுபடியானது.

பதவி மோகம் கொண்ட சமல் ராஜபக்சே… – 79 வயதான சமல் ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்துள்ளார். இலங்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனத் துறை என பல அமைச்சரவைப் பதவிகளையும் வகித்திருக்கிறார். இப்போது கோத்தபய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.

இவருக்கு பதவி மட்டும்தான் பிரதானம் என இலங்கை ஊடகங்களும், மக்களும் விமர்சிக்கின்றன. இலங்கையின் முதல் பெண் பிரதமரமான ஸ்ரீமாவோ பண்டாரனாயகேவுக்கு தனிப்பட்ட மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர்.

மனி லாண்டரிங் ஸ்பெஷலிஸ்ட் நமல் ராஜபக்சே… – இவரை இப்படித்தான் இலங்கை மக்கள் விமர்சிக்கின்றனர். 35 வயதான இவர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன். இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. இப்போது இளைஞர் மேம்பாடு, விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், 24 வயதாக இருக்கும்போதே இவர் நாடாளுமன்றத்தில் நுழைந்துவிட்டார். அப்போது இவருக்கு அமைச்சரவை பதவி கொடுக்கப்படவில்லை. ஆனால் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருந்தார். மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது இவர் ஊழல் மற்றும் ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்சே என்று ராஜபக்சே சகோதரர்கள் ஊழல், பொருளாதார நிர்வாகத் திறமையின்மை, மோசமான கடன் கொள்கைகள்தான் இன்று இலங்கையில் இந்த நிலைமைக்குக் காரணம் என்பது அந்நாட்டு மக்கள் வைக்கும் குற்றச்சாட்டாகும்.

உறுதுணை கட்டுரை: அல் ஜசீரா | தமிழில்: பாரதி ஆனந்த்