‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நல்லூர் சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. மதுபோதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது எனத் தற்போது என்னால் சொல்ல முடியும்.

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்துக்குச் சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை.

தனது மெய்பாதுகாவலரும், மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுக்கொண்டதை, தன்னுடைய வாகனத்தை விட்டு கீழே இறங்கி, நீதிபதி அவர்களும் பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார்.

நீதிபதிதான் இலக்கு என வந்திருந்தால், நீதிபதியை துப்பாக்கிதாரி அந்த நேரத்திலேயே நேராகச் சுட்டு இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே, இது நிச்சயமாக அந்தச் சந்தப்பத்தில் சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே எனக் கூறுவேன்.

நீதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் எந்த விதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்’ என மேலும் தெரிவித்தார்.

(Tamil Mirror)