இஸ்ரேல் போர் சூழல்

முன்னாள் இஸ்ரேல் பிரதமர் (2006-2009) எஹூத் ஒல்மர்ட், பெஞ்சமின் நத்தனியாகுவின் சமீபத்திய காசா போர் முயற்சிகளை கடுமையாக விமர்சித்து வருபவர்.

2025 மே மாதம் ஹாரெட்ஸ் இதழில் வெளியான “போதுமானது போதும். இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது” (Haaretz titled “Enough Is Enough. Israel Is Committing War Crimes”) என்ற கட்டுரையில், இந்தப் போரை “நோக்கமற்ற, திட்டமிடப்படாத, வெற்றி வாய்ப்பற்ற” மற்றும் “பொதுமக்களைப் பயங்கரமாகவும், கட்டுப்பாடின்றியும் கொல்லும்” அழிவுப் போராக விவரித்திருந்தார்.

நத்தனியாகுவின் அரசாங்கத்தைக் “குற்றவாளிக் கும்பல்” என்று விமர்சித்த அவர், மனிதாபிமான உதவிகளைத் தடை செய்வதும், அதிகளவு பொதுமக்கள் உயிரிழப்புகளும் போர்க்குற்றங்களாக அமைவதாகக் கூறினார்.

இதை அவர் CNN, NPR மற்றும் BBC நேர்காணல்களிலும் வலியுறுத்தியிருந்தார்.நத்தனியாகு இந்தப் போரை அரசியல் ஆதாயத்திற்காகவும், ஆட்சியில் தொடரவும் நீடிப்பதாக ஒல்மர்ட் குற்றம்சாட்டுகிறார்.

மே 2025 இல் நடந்த கருத்துக்கணிப்பில், 55% இஸ்ரேலியர்கள் நத்தனியாகுவின் முதன்மை நோக்கம் ஆட்சியைத் தக்கவைப்பது என்று கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். “ஹமாஸை” அழிப்பதாக நத்தனியாகு கூறும் இலக்கு “பொய்யானது, போலியானது” என்று ஒல்மர்ட் நிராகரிக்கிறார்.

ஏனெனில் “ஹமாஸ்” ஏற்கனவே பலவீனமடைந்துள்ளதெனவும், மேற்கொண்டு போரிடுவது பயனற்றது என்றும் வாதிடுகிறார்.ஒல்மர்ட் உடனடியாக காசாப் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும் நிலப் பரிமாற்றத்துடன் கூடிய இரு நாடுகள் என்ற தீர்வே அமைதிக்கு ஒரே வழி என்கிறார். அமெரிக்க ஜனாதிபதி “டொனால்ட் ட்ரம்ப்” தலையிட்டு, நத்தனியாகுவிடம் “போதுமானது” என்று கூறிப் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்கின்றார்.

உலக நோக்கில் இஸ்ரேலின் பெயர் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்ந்தால் “இஸ்ரேல்” சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்ளாகலாம் என்றும் எச்சரிக்கிறார்.இவரது விமர்சனங்கள் இஸ்ரேலிய வலதுசாரி அரசியல்வாதிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்கள் ஒல்மர்ட் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகளை (IDF) அவமதிப்பதாகவும், படை வீரர்களுக்கு எதிராக இஸ்ரேலிய மக்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.இருப்பினும், இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த அனுபவம் தன்னைப் பேச வைக்கிறது என்று கூறி, ஒல்மர்ட் போர் நிறுத்தத்திற்கும் கொள்கை மாற்றத்திற்கும் ஆதரவாகத் துணிச்சலாகப் பேசி வருகிறார்.

இது ஒரு தரப்பு இஸ்ரேலியர்களிடையே வளர்ந்து வரும் உணர்வைப் பிரதிபலிக்கிறது. ஆயினும் நடைமுறையில் இது சாத்தியமானதா ?மேலும் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் (ஏவுகணைகள் மூலம், ட்ரோன்கள் மூலம்) போர் வெறியர்களின் கரங்களை வலுப்படுத்தும் சூழ்நிலையில் சமாதான விரும்பிகள் ஓரம் கட்டப்படுகிறார்கள். என்ன அவலம் இது ?