“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

‘என்னுடைய அண்ணன் மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி’ என்றும், ‘ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்’ என்றும் தேசிய விருது குறித்து மனம் திறந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த தேசிய விருது, ‘காற்று வெளியிடை’ படத்துக்குக் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால், மணிரத்னம் ஸ்பெஷல் பர்சன். அவரை ‘ஐடியா கடல்’ என்று சொல்லலாம். அவருடன் பணியாற்றும்போது, நம்ம எந்த ஐடியா வேணும்னாலும் அவர்கிட்ட போட்டா, அதைப் பயன்படுத்தும் விதத்தில் கொண்டு வருவார். அதனால், என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி, சிறந்த மனிதரான மணிரத்னத்துக்கு மறுபடியும் என்னுடைய நன்றி.

கார்த்தி, பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி, அனைத்துப் பாடகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், என்னுடைய அருமையான குழு அனைவருக்கும் நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

‘மாம்’ படத்துக்கு இசையமைக்க வேண்டும் என சென்னை வந்து என்னிடம் கேட்டார் ஸ்ரீதேவி. இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால், அந்த விஷயம் நாட்டுக்கு மிகவும் அவசியம் எனத் தோன்றியதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன். அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்ததற்கு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனத் தெரிவித்துள்ளார்.