கனகராயன் குளத்தின் குளக்கட்டின் நடுப்பகுதியில் உம்மை

செய்தி ஊரெங்கும் வேகமாக பரவியது. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு தொகுதி விவசாயிகள் மாத்திரமே அவசர உதவி பணிக்காக அங்கு வந்திருந்தனர். உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மண் மூடைகளைக் கட்டி அடுக்கி வெளியேறும் நீரை தடுப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஊரின் நன்மை கருதி பொதுவேலைகளில் ஈடுபடக்கூடிய 40 வயதுக்கு மேற்பட்டவர்களையே அங்கு காணமுடிந்தது. இளைய தலைமுறையினர் ஓர் இருவரை தவிர எவரையும் மருந்துக்கும் காண முடியவில்லை.

இதேபோல 30 வருடங்களுக்கு முன்னர் குளக்கட்டில் ஒரு உம்மையின் உண்டாகி உடைப்பு ஏற்படும் நிலை 20/01/1995 அன்று ஏற்பட்டது.

அன்றைய நாள் நினைவுகள் இப்போது என் கண்முன்னே நிழலாடியது. அன்று எனது 22 வயதில் என்னை ஒத்த நூற்றுக்கு மேற்பட்ட இளையவர்கள் தங்கள் தோளிலே மண் மூடைகளை சுமந்து குளக்கட்டின் மீது அடுக்கி நீர் வெளியேறுவதை தடுத்தனர்.

ஆனால் இன்று ஊரின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியிருப்பதை என்னால் உணர முடிந்தது.

இன்று அத்தகைய சமூகப் பொறுப்பு மிக்க இளைஞர்களை காணவில்லை என்ற கவலையே என்னைப் பற்றி இருந்தது.

அதிகாலை ஆறு மணியிலிருந்து மாலை இரண்டு மணி வரை தொடர்ந்து முயன்று குளக்கட்டின் பாதுகாப்பை இரட்டிப்பாக உறுதிப்படுத்தப்பட்டது.

சமூகப் பொறுப்பு மிக்கவர்கள் அதிகம் இல்லை, அதிகமானவர்கள் வருகை தரவில்லை என்பதனாலேயே அவசர உதவிக்காக பத்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் வந்து உதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் இங்கே முக்கியமானதும் கவனிக்கப்பட வேண்டிய விடியமுமாகும்.

மாலை இரண்டு மணி அளவில் குளக்கட்டின் செப்பெனிடும் பணி நிறைவு செய்யும் போது ஊரவன் என்ற அடிப்படையில் நான் மட்டுமே அங்கிருந்தேன். ஏனையவர்கள் நீப்பாசனத் திணைக்கல ஊழியர்களும், இராணுவத்தினரும் என்பதை கனத்த மனதோடு இங்கு பதிவு செய்கிறேன்.

கீழுள்ள புகைப்படம் அதனை உறுதிப்படுத்தும்.

கனத்த மனதோடு ஊறவரைத் திட்டித் தீர்க்க நான் விரும்பவில்லை.

ஆனால் இதுதான் இன்றைய எங்கள் ஊரவரின் மனநிலை 30 வருடத்தில் என் ஊர் தலைகீழாக இருப்பதை உணர்கிறேன். இன்னும் 30 வருடத்தின் பின் ஊர் ஊராக இருக்காது என்பதையும் என் அறிவுக்கண் அறியும். ஆயினும் முயற்சியும், நம்பிக்கையையுமே வாழ்க்கை.

  • தி.திபாகரன்