சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் செயல்பாட்டை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி உண்மைகளை தவறாக சித்தரித்து இந்த தடை உத்தரவு பெறப்பட்டதாக சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கவனத்தில் எடுத்ததன் பின்னரே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் நீதிமன்றத்தின் எல்லையை விட்டு வெளியேறியதால் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு, 2ஆவது பிரதிவாதியான விமான நிலைய சேவைகள் நிறுவன சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன மன்றில் கோரிநின்றார்.

ஏரோஃப்ளோட் விமானங்கள் இலங்கைக்கான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதால், இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான சாத்தியமான விரைவான திகதியை ரஷ்ய விமான நிறுவனம் சார்பில் ஆஜரான கலாநிதி லசந்த ஹெட்டியாராச்சி கோரினார்.
 
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க இந்த வழக்கை ஜூலை 5 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தார்.

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, இலங்கையின் எல்லைக்குள் இருந்து ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஜூன் 2 அன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்தது.
 
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட்  எயர்லைன்ஸ் இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் நிறுவனமானது இந்தத் தடை உத்தரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.