சந்தேக விஷ ஊசியால் மரணமடைந்தோர் பெயர் விபரப் பட்டியலை உடன் தாருங்கள்; வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் மனோ கோரிக்கை

சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறி வடமாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டாகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிலும் ஒரு முன்னாள் போராளியால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உங்கள் மாகாண சபையின் அமைச்சர் பா.டெனீஸ்வரன் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
எனவே இதுபற்றி, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்துள்ளேன். இது தொடர்பில் மேலும் தகவல்களை, உங்கள் மாகாண சுகாதார அமைச்சின் மூலமாக பெற்றுத் தாருங்கள்.

நீங்கள் தரும் தகவல் திரட்டில் புனர்வாழ்வு பயற்சிகள் பெற்று வீடு திரும்பிய பின்னர் சந்தேகத்துக்குள்ளான முறையில் இறந்து போனதாக கூறப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்கள், அடையாள அட்டை இலக்கம், கடைசியாக வாழ்ந்த விலாசம், பிரதேச செயலாளர் பிரிவு, இறந்தபோது அவர்களது வயது, அவர்களது இறப்பிற்கான அதிகாரப்பூர்வ மருத்துவ காரணம், இறந்த திகதி, தொடர்பு கொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கித் தாருங்கள் என வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது;

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் உங்களுடன், கொழும்பில் இருந்து பலாலிக்கு பயணிக்கும் வேளையில் நேரடியாக உரையாடியுள்ளேன். இந்தத் தகவல்களை பெற்றுத் தரும்படி அப்போதும் கோரியிருந்தேன்.

இந்நிலையில் உங்கள் மாகாண சபையின் அமைச்சர் டெனீஸ்வரன் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே இது தொடர்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, நான் கோரியுள்ள விபரங்களை கூடிய விரைவில் எனக்கு அனுப்பி வையுங்கள்.
மேற்கண்ட தகவல்கள் கிடைக்கப் பெறுமானால், இது தொடர்பில் காத்திரமான மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என நான் நம்புகிறேன். ஏனையோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இத்தகைய தகவல்கள் மேலும் வலுவடைய செய்யும்.

இத்தகையை சம்பவங்கள் நடைபெறவில்லை என வடக்கிலும் தெற்கிலும் கூறிவருவோருக்கும் இது பதிலாக அமையும் என நம்புகிறேன். அத்துடன் இந்தத் தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்தக் குற்றச்சாட்டு ஏற்புடமை கொண்ட ஒரு குற்றச்சாட்டாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல் இருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.