செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

ஐக்கிய அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கான ஒத்த பதிலளிப்புகளின் தொடர்ச்சியாகவே தென்மேற்கு சீனாவின் ஷிஷுவான் மாகாணத்தின் செங்டுவிலுள்ள துணைத் தூதரகத்தை மூடும் சீனாவின் உத்தரவு அமைகின்றது.

ஹூஸ்டன் துணைத் தூதரகத்திலிருந்து வெளியேறுவதற்கு இன்று வரையில் 72 மணித்தியாலங்கள் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் தாம் பதிலளிப்போம் என சீனா எச்சரித்திருந்ததுடன், மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய அமெரிக்காவை வலியுறுத்தியிருந்தது.

செங்டு துணைத் தூதரகம் மூடுவதற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1985ஆம் ஆண்டு திறக்கப்பட்ட குறித்த துணைத்தூதரகத்தில், உள்ளூரில் பணிக்கமர்த்தப்பட்ட ஏறத்தாழ 150 பணியாளர்கள் உட்பட ஏறத்தாழ 200 பணியாளர்கள் பணியாற்றுவதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.