டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.

புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் குறிப்பாக அமெரிக்கா இலண்டன் சுவிஸ் கனடா ஜேர்மனி பிரான்ஸ் நோர்வே மற்றும் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளிலும் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களுக்கு விடுத்துள்ள உட்சுற்று அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாக உலக நாடுகளெங்கும் எமது உறவுகள் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் வாழும் நாடுகளில் அந்த நாட்டு அரசுகள் சிறுபான்மை இனங்களுக்கு எவ்வாறு பகிர்ந்து வழங்கியுள்ளன என்பதையும்இ சமஷ்டி முறைமையின் பிரயோகங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பது தொடர்பாகவும் ஆராயவேண்டும். எனவே துறைசார் நிபுனர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றினைத்து விரிவான கலந்துரையாடல்களைச் செய்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் இணைப்பதற்கான வரைபுக்கு அவர்களின் ஆலோசனைகளையும்

பரிந்துரைகளையும் அனுப்பிவைக்குமாறும் குறிப்பிட்டுள்ள செயலாளர் நாயகம் அவர்கள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படுவதற்கு அரசியல் வரைபைத் தயாரிப்பதற்காக ஐவரைக் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொது மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான குழுவிடம்(public Representations Commitee on Constitutionel Reforms ) புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களும் அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் ஊடாக இக்குழுவை தொடர்பு கொண்டு கானொளி ஊடாக தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு

தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்ததை பிரதமர் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் கூறியிருக்கின்றார். எனவே இந்த வாய்ப்பையும் வசதியையும் எமது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி புதிய அரசியலமைப்புக்கான தனது அரசியல் பரிந்துரை வரைபை விரைவில் சமர்ப்பிக்கும் என்றும் கட்சி அமைப்பாளர்களுக்கான தனது உட்சுற்று அறிக்கையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.