தமிழகம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து?

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 

அதன்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது, 

பிரதம மந்திரியின் உஜ்வாலா இரண்டாவது திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி ஆதார் போன்ற ஆவணம் இல்லாமல் எரிவாயு இணைப்பை பெற முடியும். 

இந்த திட்டத்துடன் இலங்கை தமிழர்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். 

இதன் மூலம் தற்போது மாநில அரசு அறிவித்த திட்டத்திலிருந்து 6 கோடி ரூபாய் செலவினம் குறைக்கப்படும்.

மாநில அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் தான் தமிழகம்- இலங்கை இடையே படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. 

இதன் காரணமாக காரைக்காலிலிருந்து காங்கேசன் துறைக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கை மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை தமிழக துறைமுகங்களிலிருந்து தொடங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரிலிருந்து இலங்கை தீவுக்குச் செல்வதற்கான பாலத்தை அமைத்திட வேண்டும்.’ என கோரிக்கை விடுத்தார்.