தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் போதைப்பொருளை எதிர்ப்போம் என சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதிப்பத்திரங்களும், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளின் ஒருபகுதியினை விடுவிக்கும் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

அத்தோடு போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான துரித தொலைபேசி இலக்கம் 1984 அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, சி.சிவமோகன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன், மாவட்ட செயலர,; கடற்படை தளபதி, என பலரும் கலந்துகொண்டனர்