‘தேர்தலுக்குப் பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி’

மேலும் கருத்துத் தெரிவித்த ப. சிதம்பரம், “உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை நாங்கள் பெறுவோம்.

உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணி வைக்க முயற்சித்தோம். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எங்கள் அணிக்கு மாயாவதி வருவார் என்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாயாவதி இறங்கி வருவார். எங்களுடன் கூட்டணி அமைப்பார்.

தொகுதிப் பங்கீட்டில் பாரதிய ஜனதா விட்டுக் கொடுத்து சென்றதாகவும் காங்கிரஸ் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் கூறுவது தவறு.

வடக்கு, மேற்கு மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. பொதுவாக கருத்து கணிப்புகளை நான் நம்புவதில்லை. கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன. எதிர்காலத்திலும் இது தவறாகத்தான் போகும்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது 30 மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் சூழ்நிலையில் நடக்கிறது. இந்த 30 மாநிலங்களில் 10 மாநிலங்களில் காங்கிரஸை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்கிறது. 10 மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எதிர்க்கின்றன. மற்ற 10 மாநிலங்கள் சிறியவை. இவற்றை ஒட்டு மொத்தமாக கருத்து கணிப்பு மூலம் சொல்லிவிட முடியாது.

கருத்து கணிப்புகள் சரியாக இருக்கும் என்று கருதினால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும். கருத்து கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விடலாமே” என்று கூறினார்