திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் கட்டமைப்பு தலைவர்: உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க. உறுப்பினர்கள்: மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல்நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன. செயலாளர்: முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன.
விசாரணையின் முக்கிய நோக்கங்கள் இந்த ஆணைக்குழு பின்வரும் விடயங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்: நிர்வாக முறைகேடுகள்: நிலக்கரி இறக்குமதி கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை.
செயற்பாட்டு குறைபாடுகள்: தரப்பரிசோதனை, விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் நிலக்கரியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் காணப்பட்ட சிக்கல்கள். இலக்குகள் மற்றும் ஒப்பந்தங்கள்: எதிர்பார்க்கப்பட்ட மின் உற்பத்தி இலக்குகள் எட்டப்பட்டதா என்பதுடன், ஒப்பந்த மீறல்கள் இடம்பெற்ற போது உரிய சட்ட நடவடிக்கைகள் அல்லது கொடுப்பனவு நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்படும்.
பொறுப்புக்கூறலும் பரிந்துரைகளும் தவறிழைத்த அரசியல் அதிகார தரப்பினர், இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் (Sri Lanka Coal Private Limited) அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை ஆணைக்குழு பரிந்துரைக்கும்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் தவிப்பதற்காக நிலக்கரி கொள்வனவு மற்றும் மின் உற்பத்தி செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களையும், ஏனைய தொடர்புடைய முறைகேடுகளுக்கான தீர்வு நடவடிக்கைகளையும் இந்த ஆணைக்குழு அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது.