‘பாகிஸ்தான் தலையிடுவதற்கு இடமில்லை’

ஐம்மு காஷ்மிரில் மக்கள் இறந்து கொண்டிருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையின் உறுப்பினரான ராகுல் காந்தி தெரிவித்ததை, ஐக்கிய நாடுகளின் பல்வேறுபட்ட அதிகாரிகளுக்கான கடிதத்தில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மஸாரி நேற்று முன்தினம் குறிப்பிட்ட மறுநாளான நேற்றே, மேற்குறிப்பிட்ட ராகுல் காந்தியின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

அந்தவகையில், அரசாங்கத்துடன் பல பிரச்சினைகளில் தான் வேறுபடுவதாகவும், ஆனால் காஷ்மிர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையென்றும், பாகிஸ்தானோ அல்லது எந்தவொரு வெளிநாடோ தலையிடுவதற்கு இடமில்லை என ஷிரீன் மஸாரியின் கடிதத்துக்கான டுவிட்டர் பதிலளிப்பில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதேவேளை, ஜம்மு காஷ்மிரில் வன்முறை காணப்படுவதாகவும், உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கான பிரதான ஆதரவாளராக அறியப்படுகின்ற பாகிஸ்தானால் தூண்டப்படுவதாலும், ஆதரவளிக்கப்படுவதாலுமே வன்முறை காணப்படுவதாக ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

சுயாட்சியை திரும்பப் பெற்று ஜம்மு காஷ்மிரையும், லடாக்கையும் இந்திய மத்திய அரசாங்கம் பிரித்த நான்கு நாட்களைத் தொடர்ந்து, இம்மாதம் 10ஆம் திகது வன்முறை தொடர்பாக தனது கவலையை ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.