மன்னார் மாவட்டம்: இயற்கை அனர்த்தம்

இவ்வெள்ளப் பாதிப்பினால் 30,569 குடும்பங்களைச் சேர்ந்த 1,27,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22 வீடுகள் முழுமையாகவும், 822 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரம் எனக் கருதப்படும் கால்நடைத் துறையும் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

சுமார் 15,000 கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவற்றில் சில ஆயிரம் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

கடுமையான மழை தொடர்ந்த மூன்று நாட்கள் கடந்த பின்னரும், 3ஆம் திகதி மாலை வரையும் குஞ்சுக்குளம் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது.இத்தகைய சூழ்நிலையில், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை கடற்படை மற்றும் விமானப்படை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

மாவட்டத்திற்குள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு ஒப்பீட்டளவில் குறைந்த சேதத்தை எதிர்கொண்டிருந்தாலும், நானாட்டான், முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மாந்தை மேற்கு பிரதேசத்தின் பெரிய மடு, கூராய், சீது விநாயகபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இப் பகுதிகளிலும் கடற்படை மற்றும் விமானப்படை மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கால்நடைகள் பிரதான வாழ்வாதாரமாகக் காணப்படும் மன்னார் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்து அல்லது காணாமல் போனதால், வட மாகாண கால்நடை உற்பத்தி மாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி வசீகரன் தலைமையில் விசேட கால்நடை வைத்தியர்கள் அங்கு சென்று, மீதமுள்ள கால்நடைகளின் உயிரைக் காக்க அவசர சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.