பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாவளைப் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்த மற்றுமொரு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், பிரேமலால் ஜயசேகர தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அவர்களை அச்சுறுத்தியதாக நுவரெலியா பொலிஸாருக்குப் புகார் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி ரவீந்திர பிரேமலால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக நுவரெலியா பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.