‘முஸ்லிம்களின் பிரதேசங்களை சோதனையிடுக’

இவ்வாறு செய்வதால், முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள மக்களின் சந்தேகம் நீங்கும் எனவும், அக்கட்சி எடுத்துரைத்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மேற்கண்டவாறுத் தெரிவித்தார். பள்ளிவாயல்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையிடக் கூடாதெனத் தெரிவிக்கும் கருத்தை, தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.

ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நேரத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்றார்.

ஐ.தே.க அரசாங்கத்தால் தொடர்ந்து முன்நோக்கிச் செல்ல முடியாதென்பதை அறிந்துகொண்டே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் எனினும், உயர்நீதிமன்றம் அந்த ஆட்சி மாற்றத்தை நிராகரித்ததெனக் கூறிய அவர், நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலைக்கும் உயர்நீதிமன்றமும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

ஹெட்டிபொல பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன. மதுபோதையில் அங்கு கூடியிருந்த சிங்கள இளைஞர்கள், ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தைத் தாக்கி, பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தைச் சூறையாடத் திட்டமிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்தே, குறித்த பொலிஸ் நிலையத்திலிருந்த சந்தேகநபர்களை, பிங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு மாற்ற, தான் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

இறுதி நேரத்தில் சரியான தீர்மானம்

அமைச்சர் ரிஷாட், அரசாங்கத்துக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில், இறுதி நேரத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சரியான தீர்மானம் ஒன்றை எடுக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு சபை கூடும்

நாட்டின் பாதுகாப்புக் கருதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், தேசியப் பாதுகாப்புச் சபை ஒன்றை நியமிக்க, ஜனாதிபதி தீர்மானித்திருப்பாகவும் இம்மாத இறுதியில், இச்சபை கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு முகங்கொடுத்துவரும் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானதொரு சட்டம் வேண்டும் என்றும் இதனையே மதத் தலைவர்களும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சு.கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 11 சட்ட யோசணைகளைச் சட்டமாக்குவதற்கு, இதுவே சிறந்த தருணம் எனக் கூறிய அவர், அதனை விரைவாகச் சட்டமாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.