மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் கைது

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்துவதற்காக சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

மெரினா பொழுதுபோக்கு இடம் என்பதால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மெரினா கடற்கரைக்குள் எந்த இயக்கமும் நுழைய முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னை மெரினா, சேப்பாக்கம், நேப்பியர் மேம்பாலம், கலங்கரை விளக்கம் பகுதிகளில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக பாரதி சாலையின் முக்கிய இடத்தில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாரதி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
வைகோ ஆதங்கம்

இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா?; இந்தியாவில் அரசுகள் மாறின. துரோகம் மாறவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

இதைத் தொடர்ந்து மெரினாவை நோக்கி பேரணியாகச் சென்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நினைவேந்தல் பேரணியில் கலந்துகொண்டு மெரினாவை நோக்கிச் சென்றவர்கள் கைதாகுமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.